வியாசர் பதில்கள்
Share
1) தையிட்டி விகாரைக் காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்குக் கிடைக்காதா வியாசரே?
செல்வன்-தையிட்டி
தையிட்டி விகாரை விடயம் தமிழ் மக்களுக்கு சாதகமானதாய் வருவது போல இருந்தது.
அதற்கு நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாரையின் விகாராதிபதிகளின் பிரசன்னமும் வலுச் சேர்த்திருந்தது.
என்னவோ தெரியவில்லை இப்போது அவர்களும் அமைதியாகி விட்டனர்.
அது சட்டவிரோத விகாரையே. தமிழ் மக்க ளின் காணிகளை அவர்களிடம் வழங்குங்கள் என கோரியவர்கள் தற்போது அமைதியாகி விட்டனர் எனின் ஏதும்
உட்குத்து இருக்குமோ என்று தோன்றுகிறது.
2) தமிழக தேர்தல் களம் எவ்வாறாக இருக்கும் என்று வியாசர் கருதுகிறீர்?
தர்விந்-மந்துவில்
தமிழக தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிக வாக்குகள் இடப்பட்ட தேர் தலாக இம்முறைத் தேர்தல் அமைந்திருக்கிறது.
86% விகித வாக்குகள் இடப்பட்டிருக்கின்றன.
இம்முறை புதிய வரவாக நடிகர் விஜய் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நிலையில் அவரின் சர்க்கார் படத்தை இது நினைவூட்டுவதாக இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
தேர்தல் நிலவரங்கள் எவ்வாறு அமையும் என்பதை எதிர்வரும் 4 ஆம் திகதி அறிந்து கொள்ளலாம்.
3) ஈரான் மீதான போர் தொடுப்பில் அமெரிக்காவின் நிலை என்ன வியாசரே?
விதுன்-யாழ்ப்பாணம்
காலவரையறையின்றி போர் நிறுத்தம் அமுலாகியிருக்கும் என அமெரிக்கா அறிவித் திருப்பதென்பது சர்வசாதாரணமான விடய மல்ல.
உலகின் வல்லரசு நாட்டை எந்த நிலைக்கு ட்ரம்ப் கொண்டு வந்து விட்டு விட்டார் என்பது இப்போது புரிகிறதா?
ஊர் பழமொழியயான்று உண்டு நாயை அடிப்பானேன் மலத்தைச் சுமப்பானேன் என்று.
இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ அமெரிக்காவுக்கு நன்றாகப் பொருந்தும்.
4)ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமே வியாசரே?
விஜயகுமார்-யாழ்ப்பாணம்
நிச்சயமாக நீதி கிடைத்தே ஆக வேண்டும். ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல, ஈழத் தமிழினத்தின் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி ஒரு இன அழிப்பையே மேற்கொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் இறைவனின் திருவிளையாடல் என்ன வெனில்,
ஈழத் தமிழினத்தின் மீது குண்டு போட்டு கொன்றவர்களும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களும் ஒன்று என்பது தான்.
தமிழினத்திற்கு நீதி தராவிடினும் சிங்களவர்கள் மீதான தாக்குதலுக்கு நீதி தந்தே ஆக வேண்டுமே.
இது தான் இறைவனின் திருவிளையாடல்.
5) கவிஞர் தீபச் செல்வனின் நூல்களை சுங்கத்துறையினர் தடுத்து வைத்திருப்பது ஊடக சுதந்திர மறுப்பல்லவா வியாசரே?
பரமேஸ்வரன்-கிளிநொச்சி
தீபச் செல்வனின் படைப்புக்கள் ஈழத்தமிழினம் பட்ட வலிகளையும் வேதனைகளையும் உலகிற்குச் சொல்லுவதாய் அமைந்திருப்பதே இங்குள்ள பிரச்சினை.
எனக்கு தீபச் செல்வனை நன்கு அறிமுகம்.
அவர் எப்போதும் தமிழினம் தொடர்பிலும் அவர்களின் இன்னல்கள் தொடர்பிலும் சிந் தித்த வண்ணமே இருப்பார்.
அவரின் எழுத்துக்களும் அதை வெளிப்படுத்துகின்றன.
இதே வேறு யாருமாக இருந்தால் என்றைக்கோ இங்கிருந்து ஓடியிருப்பார்கள்.
ஆனால் தீபச் செல்வன் தன் எழுத்துக்களால் இன்று வரை போரிட்டுக் கொண்டேயிருக்கிறார்.
6) தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டும் என இந்திய உப ஜனாதிபதி கூறியிருக்கிறாரே?
சுதன்-குப்பிளான்
ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாயினும் எம்மவர்களின் பதவி ஆசை அதற்கு இடம் கொடாதே.
தமிழினத்தின் அபிலாசைகளை வென்றெடுக்கும் எண்ணமில்லாதவர்களே தமிழ் தேசிய அரசியல் தலைமைகளாக இருக்கிறார்கள் என்பது தான் வேதனையும் முரணும்.
தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபடும் காலம் கடந்து விட்டது.
இனி அவர்கள் ஒன்றுபடுகிறார்கள் எனின் அது அவர்களின் சுயநல அரசியல் ஆதாயத்துக்கானது என்றே பொருள்.
7) சீமானின் அரசியல் பிரவேசத்தில் இம்முறை மாற்றம் ஏற்படுமா?
சங்கீத்-தொட்டிலடி
சீமானின் அரசியல் கொள்கைகள் தமிழக மக்களைச் சென்றடைய நீண்ட காலமாகும் என்பது நிச்சயம்.
ஆயினும் சீமானுக்கு சட்டமன்றத்தில் ஓர் இடம் கிடைக்க வேண்டும் என்பது ஈழத் தமிழனாக எம் ஆழ்மனதின் விருப்பு.
அது இம்முறை நிறைவேறினால் பெரும் மகிழ்ச்சி.
8) ஒருவன் நல்லவனாக வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் வியாசரே?
இஷாத்-துன்னாலை
நல்லவனாக வாழ்வதற்கு வரைவிலக்கணம் என்று எதுவுமேயில்லை.
அது பிறப்பிலிருந்து வரவேண்டியது. சூரன் முருகனுடன் போரிடுகிறான். ஒரு கட்டத்தில் முருகன் தனது திருப்பெருவடிவை சூரனுக்கு காண்பிக்கிறார்.
திருப்பெருவடிவைக் கண்ட சூரன் மனமுருகிறான்.
ஆயினும் அவனின் மமதை அவன் மனதை உடைக்கிறது.அது, சூரனை அழிப்பதை விட வேறு வழியில்லை என்ற முடிவை முருகனை எடுக்க வைக்கிறது.


