வியாசர் பதில்கள்
Share
1) இப்போது பலர் சமூக வலைத்தளப் போராளிகளாக தங்களை உயர்த்துகின்றனரே வியாசரே?
ரிதுஷ்-வதிரி
முகம் காட்டத் துணிவில்லாத முட்டாள்கள் தம் முகம் மறைத்து, பெயர்-ஊர் மறைத்து எங்கு நல்லது நடந்தாலும் அதைக் குழப்புவதாயும் பெண்களை இழிவுபடுத்துவதாயும் அடுத்தவர்களின் குடும்பங்களைக் குலைப்பதாயும் செயற்படுவது நல்ல மனிதனுக்கு அழகில்லையே.
என்னைப் பொறுத்தவரை இந்த முட்டாள்களை மனிதர் என்ற வரையறைக்குள் எடுக்கவே மாட்டேன். திருத்தம் உயிரினம் என்ற வரையறைக்குள் எடுக்க மாட்டேன்.
வீரனுக்கு அழகு நேருக்கு நேர் நிற்பது. ஒழிந்திருப்பவனை ஒரு நாளும் வீரன் என்று கூற மாட்டார்கள்.
2) காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் ஒற்றையாட்சி பறிபோகும் எனப் பதறுகிறாரே சரத் வீரசேகர?
கணேஷ்-பருத்தித்துறை
அவரின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை இனவாத சிந்தனை தேங்கிக் கிடக்கிறது.
அப்படியிருக்கும் போது இவரால் தெளிவார்ந்த சித்தாத்தங்கள் பற்றிச் சிந்தித்துப் பார்க்க முடியாது.
மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரம் என்பதில் வடக்கு-கிழக்கை மையப்படுத்திப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது.
மாகாணங்களுக்கு அதிகாரம் என்பதில் வடக்கு-கிழக்கு தவிர்ந்து மிகுதி 7 மாகாணங்கள் இருக்கின்றனவே. அவ்வாறெனின் இனவாதம் உங்கள் மனங்களில் அசுத்தமாய் தேங்கிக் கிடக்கிறது என்பதுதானே பொருள்.
3) ராஜபக்சர்களிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம் சென்றால்..?
தமிழ்-யாழ்ப்பாணம்
அடுத்த கணமே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகள் கிடப்பில் போடப்படும்.
ஊழல் விசாரணைகள் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று அறிவிக்கப்படும்.
அரச சொத்துக்களை இங்கு எவரும் தவறாகக் கையாளவில்லை என்று அடித்துக் கூறப்படும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் பலர் உள்ளே செல்ல வகை செய்யப்படும்.
ஈழ விடுதலைப் போர் பற்றிப் பேசியவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும்.
ஆகமொத்தத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒன்றுக்கு நூறு விகிதம் அமுல்படுத்தப்படும் தமிழினம் ஒட்டுமொத்தமாய் அதில் அமுக்கப்படும். அவ்வளவுதான்.
4) நாட்டின் பணத்தை கொள்ளையடித் தவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அதை அரசியல் பழிவாங்கல் என்கின்றதே எதிர்க்கட்சி?
சுதன்-குப்பிழான்
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்றொன்று உண்டென்பதிலும். உலகின் எந்தத் திருடன் நான் திருடன்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கின்றான்.
ஏதோவொரு வகையில் தமக்கு நியாயமான ஒரு பதில் அவர்களிடம் இருந்தே தீரும்.
இந்த அரசு ஊழல்வாதிகளை உள்ளுக்குப் போடும் செயற்றிட்டத்தைக் கொண்டுவர பலருக்கு குலைப்பன் அடிப்பதை உணரக் கூடியதாய் உள்ளதல்லவா?
முதுகில் புண் இல்லையயன்றால் ஏனைய்யா காடுபுகப் பயப்பட வேண்டும்?
5) அக்கினிக் கடவுள் ஆக்ரோசம் கொண்டு உலகை ஒரு கை பார்க்கப் போகிறது போலவே?
மகாலட்சுமி-உரும்பிராய்
இயற்கையை கடவுளாய் வழிபட்டனர் எம் முன்னோர். காற்றை, நெருப்பை, மழையை, இடியை, மின்னலை, மரத்தை என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுளாகப் பார்த்தனர்.
அப்போது இயற்கை இயற்கையாகவே இருந்தது. எப்போது மனிதன் இயற்கையில் கைவைக்கத் தொடங்கினானோ அன்று தொட்ட நாசம்.
அது புயலாய், சூறாவளியாய், பெரும் மழையாய், கொடும் வறட்சியாய், சுடும் வெயிலாய் மனிதனை அழிக்க முற்பட்டுவிட்டது.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மீண்டும் மனிதன் இயற்கையை சமநிலைப் படுத்தினால் எல்லாம் சுமூகமாகும்.
6) மணல் கடத்தல் மாபியாக்களைத் தடுக்கவே முடியாதா வியாசரே?
வாதிரன்-கொடிகாமம்
சில விடயங்களுக்கு விடுதலைப் புலிகள் வேண்டும் என்று இன்னும் பலர் கூறுவதை அவதானித்திருக்கின்றேன்.
ஆம் அதில் இதுவும் ஒன்று. அவர்கள் இருந்திருந்தால் எவனாவது ஒரு பிடி மண்ணைத் தொட்டிருப்பானா?
என்ன செய்வது நாகங்கள் இல்லாத ஊரில் நாக்கிளிப் புழுக்கள் படமெடுத்தாடுவது போல இங்கு பல நாக்கிளிகள் தாம் நாகங்கள் என்று ஆடுகின்றன.
முடிவு, எமது இயற்கை வளம் பறி போய்க்கொண்டிருக்கிறது.
7) செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்குமா?
செவ்வந்தி-அரியாலை
உலக வரலாற்றில் மிகப்பெரிய மனிதப் புதைகுழி என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது செம்மணிப் புதைகுழி.
அங்கு எலும்புக் கூடுகளாகக் காட்சியளிப்பவர்கள் அனைவரும் எம் தமிழ் இனத்தார்.
சோதனைச் சாவடியைக் கடக்கும் போதோ? சுற்றி வளைப்பின் போதோ? தலையாட்டி முன் நிறுத்தப்பட்ட போதோ? காட்டிக் கொடுக்கப்பட்டோ? காணாமல் போனவர்களே அங்கு எலும்புக் கூடுகளாக….
இந்த நிலை உலகின் வேறு எந்த இனத்துக்கும் வரக்கூடாது. தமது சொந்த நிலத்திலேயே எலும்புக் கூடுகளாக காட்சிப் பொருளாக கிடப்பது எவ்வளவு கொடுமையானது.
8) இளம் வயதுத் தற்கொலைகளைத் தடுக்க முடியாதா வியாசரே?
மதுபாலா-கிளிநொச்சி
எம் சமூகக் கட்டமைப்பு உடைக்கப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம்.
இயந்திர வாழ்க்கை. பிள்ளைகளைக் கவனிக்காத பெற்றோர் பணத்துக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
தமக்கு வரும் பிரச்சினைகளை பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது பெற்றோர்களே தவிர பிள்ளைகள் வந்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எம்முடன் பேசமாட்டார்கள்.
தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை தம்மால் சமாளிக்க முடியாத கட்டத்தில் அவர்கள் தவறான முடிவைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.


