தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 30
சைவத் தமிழர்களை பெளத்தத்திற்கு மதமாற்றம் செய்கின்ற காரியத்தை ஆட்சித் தரப்புகள் செய்யாததன் காரணமாக, ஒரு பெரும் சவாலில் இருந்து நம் சைவத் தமிழ் தப்பிக் கொண்டது.
அதேவேளை தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாத காரணத்தாலேயே தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகள் அமைவது எதிர்ப்புக்கு ஆளாகிறது என்ற உண்மையையும் நாம் இங்கு கூறியாக வேண்டும்.
ஆம், கிறிஸ்தவம் என்பது மேற்குலகிற்குரியது. நம் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து மதமே பரவிக்கிடந்தது. இங்கு பெளத்தம் என்பதும் இந்து மதத்தின் உற்பவமே.
அவ்வாறாயின், நம் நாட்டில் மேற்கத்தைய சமயத்தைப் பிரதிபலிக்கும் தேவாலயங்கள் அமைவதையே நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் அதை நாம் செய்யவில்லை. இதற்குக் காரணம் கத்தோலிக் கத்தை- கிறிஸ்தவத்தை நம் தமிழர்களும் பின்பற்றுவதேயாம்.
மாறாக, பெளத்தம் சார்ந்த தமிழர்கள் இல்லாத போது, தமிழர் பிரதேசங்களில் எதற்காக பெளத்த விகாரைகள்? என்ற கேள்வியினூடு விகாரைகளுக்கான எதிர்ப்பு எழுகிறது.
இதற்கு நல்ல உதாரணம் தையிட்டியில் அமையப் பெற்ற பெளத்த விகாரையாகும்.
ஆம், தையிட்டியில் அமைக்கப்பட்ட பெளத்த விகாரை தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் விகாரையை அமைப்பதென்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அதேநேரம் ஒரு சைவ ஆலயம் அல்லது கத்தோலிக்க தேவாலயம் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டிருந்தால், உரிய காணிச் சொந்தக்காரர் தவிர, அந்தக் காணிக்காக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்ப் பொது அமைப்பினர் களத்தில் இறங்கி காணி உரிமையாளர்களுக்காகப் போராட்டம் நடத்த முன்வருவார்களா? என்றால், அதற்கான பதில் இல்லவே இல்லை என்பதாகவே இருக்கும்.
ஆக, தையிட்டியில் அமைக்கப்பட்ட பெளத்த விகாரைக்கான எதிர்ப்பு என்பது தனித்து அது தனியார் காணிகளில் அமையப் பெற்றது என் பதற்கானது மட்டுமல்ல. மாறாக, பெளத்த விகாரையை நம் தமிழர் பிரதேசத்தில் அமைக்கக் கூடாது என்ற உள்நோக்கமும் கொண்டது என்பதை இங்கு குறித்துரைப்பது அறத்தின் பாற்பட்டதாகும்.
ஆம்,செம்மணியில் இருந்த சதுப்பு நிலத்தை உரிய அனுமதிகள் பெற்று தரையாக்கி, அதில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய் யப்பட்டது. கூடவே நல்லூரை இராசதானியாகக் கொண்டு இந்த மண்ணை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் அரண்மனையின் மாதிரி அமைப்பை அவ்விடத்தில் நிர்மாணித்து, எங்கள் தமிழர் ஆட்சி வரலாற்றை ஆதாரப்படுத்துவதும் நோக்கமாக இருந்தது.
ஆனால், திடீரென நுழைந்த சிலர் அந்த இடத்தை இலக்கு வைத்தனர்.
செம்மணியின் பரந்த பகுதிகளை ஓரங்கட்டி விட்டு, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை மட்டும் குறிவைத்தது மட்டுமன்றி, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் மகிமையை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பாதணிகளுடன் அவ்விடத்தில் நடமாடுவதும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதுமான காரியங்களும் நடந்தாகின்றன.
இவ்வாறு சிவலிங்கப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு அருகிலேயே இவ்விதம் நடப்பதென்பது நினையாப் பிரகாரமானதல்ல என்ற உண்மையை சைவ மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டுதற்குரியது.
ஆக, தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைவதை வெளிப்படையாக எதிர்க்கின்ற அதேநேரத்தில், சைவ அடையாளங்கள் தோற்றம் பெறுவதை மறைமுகமாக எதிர்க்கின்ற ஒரு கூட்டம் நம் மத்தியில் பலம் பெற்றுள்ளமையும் இங்கு உணரப்பட வேண்டிய விடயமாகும்.
இங்கு சைவ அடையாளங்களை மறை முகமாக எதிர்க்கின்ற தரப்பிற்கும் விகாரையை எதிர்க்கின்ற தரப்புகளுக்கும் இடைத் தொட ர்பு இல்லை என்பதையும் இங்கு கூறுவது கட்டாயமானது.
தொடரும்…


