தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29
உலகம் முழுமையிலும் இருக்கக்கூடிய வன்மங்கள்-பழிவாங்கல்கள்-ஆக்கிர மிப்புக்கள்- போர் மூட்டம் கொண்ட சூழல்கள் என அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மதம் என்பதை நாம் இங்கு எடுத்துரைப்பது கட்டாய மானதாகும்.
ஆம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இன்றுவரை மத்திய கிழக்கு நாடுகள் மீது வன்மத்தோடு செயற்படுவற்கு மூலமாக இருப்பது மதமே.
இதனாலேயே இன்று வரை சிலுவைப்போர் என்பது பேசுபடுபொருளாக உள்ளது.
உண்மை. உலகில் ஆதிக்கம் கொண்ட கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மத வெறிகொண்டவர்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள்.
அவர்களிடம் மிகுந்த பொருளாதார பலம் இருந்தாலும் ஈவு, இரக்கம் என்பதில் அவர்களிடம் கடும் பஞ்சம் நிலவுகிறது.
இஸ்லாமியர்கள் என்பதற்காக காசா மீது நடத்தப்பட்ட கொடும் போர் இந்த உலகில் சமயங்கள் படுதோல்வி கண்டுவிட்டதற்கான சான்றாகும். இதைவிட, மத்திய கிழக்கை ஆக்கிரமிப்பதற்கு அங்குள்ள எண்ணெய் வளங்களே காரணம் எனக் கூறப்பட்டாலும் இஸ்லாமிய மதத்தை அழித்தொழிக்க வேண்டும் என்பது கிறிஸ்தவ நாடுகளின் நிலைப்பாடாகும்.
இதுபோல கிறிஸ்தவ நாடுகளை அழித்து தனித்து இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நிறுத்த வேண்டுமென்பதே மத்திய கிழக்கு நாடுகளின் மனநிலையாய் உள்ளது.
ஆக, மதவெறி காரணமாகவே உலக யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
யுத்தத்தில் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள் என்ற வேதனை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் அறவே இல்லை.
மாறாக, இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் அழிக்கப்பட்டார்கள் எனத் திருப்திப்படுகின்ற அளவில் மிக மோசமான வக்கிரத்தனங்களே எங்கும் மலிந்தும் செறிந்தும் கிடக்கின்றன.
இதற்கான காரணங்களை தேடி ஆராய்கின்ற போது, குறித்த மதத்தவர்களிடையே இயல்பாக இருக்கக்கூடிய உயிர்க்கொலையே யாவற்றுக்கும் மூலகாரணமாக அமைகிறது.
ஆம். இஸ்லாமியர்கள் ஐந்து நேரத் தொழுகையில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். ஆனால் கோழி, ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட உயிர்களைக் கொன்று குவித்து அவற்றை அவித்து உணவு மேசையில் அவற்றைக் கொட்டிப் பரவி, மாமிசத்தை உண்பது தான் அவர்களின் சமய வாழ்வு.
உயிர்க்கொலை பாவகாரியம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.
இதேபோன்று கிறிஸ்தவ நாடுகளிலும் மிருகக் கொலைகளும் அவற்றின் இறைச்சியை உணவாக உட்கொள்கின்ற முறைகளும் தர்மமாக-புண்ணியமாகக் கருதப்படுகிறது.
ஆனால் சைவ சமயம் புலால் உண்பதை மறுக்கிறது. கூடவே மாமிச உணவுகளை அசைவம் என்கிறது.
ஆக, பிற உயிர்களைக் கொன்று மாமிச உணவுகளை உண்பது இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கும் போது, பிற உயிர்களை நிந்திக்காதே எனும் ஜீவ காருண்யம் அழிந்து போகிறது.
இதன் வெளிப்பாடாகவே மனிதக் கொலைகளும் வதைகளும் உலக நாடுகளில் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தாத விடயங்களாயிற்று. இந்த இடத்தில் எம் தமிழினம் தொடர்பில் நாம் ஒரு முக்கியமான விடயத்தை இங்கு கூறியாக வேண்டும்.
ஆம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எவையும் சமயம் சார்ந்து செயற்படவில்லை என்பது தான் அந்த முக்கியமான விடய மாகும்.
ஆம், ஏலவே குறிப்பிட்டது போல உலக நாடுகளில் நடக்கின்ற அத்தனை சண்டை களுக்கும் அடிப்படைக் காரணமாக மதங்கள் இருக்க, எங்கள் ஈழத்திருநாட்டில் மட்டும் தமிழ் இனம் என்ற ஒரே இலக்கோடு விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதாவது எங்கள் விடுதலைப் போராட்டத்தில் மதம் என்பதற்கு இம்மியும் இடமிருக்கவில்லை. அதிலும் தமிழீழ விடு தலைப் புலிகள் அமைப்பு ‘மதம்’ என்ற பேச்சுக்கு ஒரு போதும் இடம் தரவில்லை.
உண்மை. விடுதலைப் புலிகளின் முகாம்களில் மாவீரர் கள் மட்டுமே வழிபடு கடவுளாக இருந்தனர். மற்றும்படி அவர்களின் முகாம்களில் கடவுள் சிலைகள், உருவப் படங்கள் எதற்கும் இடமிருக்க வில்லை.
இது மட்டுமல்ல, ஆலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுகின்ற நடைமுறைகளும் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. அதேநேரம் சிங்களப் படையினரின் முகாம்களில் கெளதம புத்தபிரானின் உருவச்சிலைகள் நிறுவப்படுவது கட்டாயமாயிற்று.
வெசாக் போன்ற புனித நாட்களில் ஒட்டுமொத்தப் படையினரும் வெள்ளை நிற ஆடை அணிந்து வரிசையாக விகாரைகளுக்குச் சென்று வழிபாடு செய்வதும் கட்டாய நடை முறையாக இருந்தது.
இதற்கும் அப்பால், இராணுவத் தளபதிகள், படை உயரதிகாரிகள் விகாரைகளுக்குச் சென்று வழிபாடு செய்வதுடன் அவர்களுக்குப் புத்த பிக்குகள் பிரித்தோதி நூல் கட்டி விடுகின்ற பெளத்த கலாசாரங்களும் இடையறாது தொடர்ந்தன.
இதில் வேடிக்கையும் வினோதமும் என்னவென்றால், குறித்த ஒரு படை முகாமுக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதியாக ஒரு கத்தோலிக்க சிங்களவர் இருந்தாலும் அவ ரின் அலுவலகத்தில்-அந்த முகாமின் நுழைபுலத்தில் புத்தபிரானே எழுந்தருளி யிருப்பார்.
தவிர, புத்தபிரானை வணங்கி விட்டே அந்த கத்தோலிக்க சிங்கள இராணுவ அதிகாரி தனது கடமையைச் செய்வார். இதுவே அவர்களின் நடை முறையாக இருந்தது.
தொடரும்…


