தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 24
நம் நாட்டிற்கு 1948 களில் சுதந்திரம் கிடைத்த போது, இலங்கையை பெளத்த சிங்கள நாடாகப் பிரகடனம் செய்வதை இலக்காகக் கொண்ட சிங்கள மேலாதிக்கக் குடிகள்; கிறிஸ்தவ சமயத்தில் இருந்து மீளவும் தங்களின் தாய்ச் சமயமாகிய பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தன.
ஒரு பகுதியினர் தாம் சேர்ந்த மதத்தில் இருந்து கொண்டாலும் அவர்கள் தங்களின் தாய்ச் சமயம் பெளத்தம் என்பதை ஒரு போதும் மறக்கவில்லை என்பதுடன் அவர்கள் சிங்கள மரபை உள்ளபடி பின்பற்றுகின்றனர்.
இங்கு சிங்களப் புத்தாண்டை சிங்களக் கத்தோலிக்கர்கள் உன்னதமாகக் கொண்டாடுவதில் இருந்து நாம் கூறியதன் உண்மைத் தன்மை உணர்தற்குரியது.
இதை நாம் கூறும் போது, நம் தமிழ்ப் புத்தாண்டை சைவத் தமிழர்கள் கொண்டாடுகிறார்களேயன்றி, தமிழின் பெயரால் கூட, கத்தோலிக்க – கிறிஸ்தவ தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை திரும்பிக் கூடப்பார்ப்பதில்லை என்பதற்குள் எங்கள் நிலைமை எப்படி என்பது தெரியவரும்.
ஆக, ஒரு காலத்தில் அந்நியர்கள் எங்கள் இந்து ஆலயங்களை அழித்தனர். அதனோடு அந்த நிட்டூரம் நின்று போகுமென்றால், இப்போது பெளத்தர்கள் எங்கள் ஆதிச் சிவன் கோயில்களை, பெளத்த விகாரைகள் இருந்த இடங்கள் எனக் கூறிக் கொண்டு அவற்றைக் கபளீகரம் செய்ய முற்பட்டுள்ளனர்.
இங்குதான் எங்கள் ஈழத்திருநாட்டில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்குகின்ற அவலங்கள் எத்தகையதென்பது தெரிய வருகிறது.
ஆம், முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவன் ஆலயமோ அன்றி இந்து ஆலயங்களோ இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லையெனத் தொல்லியல் திணைக்களம் கூறுகிறது.
ஆனால், 1905 ஆம் ஆண்டு தொல்லியல் அளவைப் பிரிவினர் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில்; குருந்தனூர் என்ற கல்வெட்டு உண்டு என்றும் அங்கு சிதலமடைந்த சைவக் கோயில் இருந்துள்ளதெனவும் அந்த அறிக்கையில் விபரிக்கப்ப ட்டுள்ளது.
இது தவிர, அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மூன்று அடி விட்டமுள்ள ஆவுடையார் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பும் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக, 1905 ஆம் ஆண்டில் குருந்தூர் மலையில் சைவ ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை தொல்லியல் அளவைப் பகுதி குறித்துரைக்க, 2026 ஆம் ஆண்டில் குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லையயன இலங்கை தொல்லியல் திணைக்களம் கூறுவது, அப்பட்டமான பொய் என்பதை இதிலிருந்து எவரும் அறிந்து கொள்ள முடியும்.
இதே போன்று தான் திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்த புத்த பிக்கு ஒருவர்; கன்னியா வெந்நீருற்று பெளத்த விகாரைக்குரிய இடம் என வாதிடலானார்.
என்ன செய்வது பெளத்தத்திற்காக ஒட்டு மொத்தச் சிங்கள இனமும் கங்கணம் கட்டிநிற்க, நம் ஈழத்திரு நாட்டின் ஆதிச் சமயமாகிய சைவ சமயத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பை ஒட்டு மொத்தத் தமிழினமும் ஒன்று சேர்ந்து எதிர்க்க முடியாத அளவில் தமிழ் மக்களை குடியேற்றவாதச் சமயங்கள் பிரித்தாளுகின்றன.
ஆம், தமிழ் இனம் இன்று சமய பேதத்தால் தன் வலிமையை இழந்துள்ளது.
எனினும் இது குறித்துப் பொது வெளியில் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்கும் எங்கள் மத்தியில் எவரும் இல்லை என்பது தான் மிகப்பெரிய துரதிஷ்டம்
ஆம், நம் தமிழ் அரசியல்வாதிகள் என்போர் இரண்டு தரப்பாக தங்களை வகுத்துள்ளனர்.
அதில் ஒரு தரப்பு தாங்கள் சார்ந்த கத்தோலிக்க- கிறிஸ்தவ சமயத்துடன் தங்களின் சமய ரீதியான அரசியல் பணிகளை மட்டுப்படுத்தியுள்ளனர்.
மாறாக, சைவ சமயம் சார்ந்த தமிழ் அரசியல் வாதிகள் தங்களை சைவ சமயத்தவர்களாக ஒரு போதும் இனங்காட்டுவ தில்லை.
அவ்வாறு தங்களை சைவ சமயத்தவர்களாக இனங்காட்டுவதால், கத்தோலிக்க-கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காமல் போகுமென்ற கற்பனை நோய்க்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் பெளத்த விகாரைகளை எதிர்ப்பதை தங்களின் சமயம் சார்ந்த அரசியலாக முன்வைக்கிறார்களே தவிர, மற்றும்படி சைவ ஆலயங்களை பெளத்த சிங்களப் பேரினவாதிகளும் பெளத்த பீடங்களும் ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.



மூலப்பிரதியை தந்துதவியவர் கலாநிதி ஆறுதிருமுருகன்
தொடரும்…


