கனவு இல்லம் மெய்ப்பட
Share
வீட்டு கட்டுமானத்தில் கம்பியின் (reinfocement) பயன்பாடு
1. அறிமுகம்:
வரைபடம் மட்டும் போதாது, விழிப்புணர்வே பிரதானம்!
கடந்த வாரக் கட்டுரையில், ஒரு பொதுக் கட்டிடத்தின் சன்பிளேட் (Sunshade) உடைந்து விழுந்த விசித்திரமான சம்பவத்தைப் பார்த்தோம்.
பொருட்கள் தரமாக இருந்தும், பொறியியலாளர் சரியா வடிவமைப்பு (Design) செய்திருந்தும், வேலைத்தளத்தில்(Site) சரியான மேற்பார்வை இல்லாத ஒரே காரணத்தினால் கம்பிகள் மேல் பக்கத்திற்குப் பதிலாகக் கீழ் பக்கம் வைக்கப்பட்டதால் அந்த விபத்து நிகழ்ந்தது என்பதைப் புரிந்து கொண்டோம்.
இதிலிருந்து நாம் கற்கும் பாடம் என்னவென்றால்: “உலகிலேயே மிகச் சிறந்த பொறியியலாளரைக் கொண்டு நீங்கள் வரைபடம் தயாரித்தாலும், வேலை நடக்கும் இடத்தில் முறையான தொழில்நுட்ப மேற்பார்வை இல்லை எனில், உங்கள் கனவு இல்லம் தரைமட்டமாவது உறுதி!”
இந்த வாரம், அதைவிட சுவாரசியமான, ஆனால் பலரும் வீடுகளில் செய்யும் ஒரு விபரீதமான தவறைப் பற்றிய கதையோடு கம்பிகளின் உண்மையான பயன்பாட்டைப் பார்ப்போம்.
2. ஒரு உண்மைச் சம்பவம்: பேராசையும்… மேசனின் ‘அபாயகரமான” ஆலோசனையும்!
ஒரு பெரிய பணக்காரர், தனது சமூக அந்தஸ்தை நிரூபிப்பதற்காகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்ட நினைத்தார். அதற்காக நாட்டின் மிகத் திறமையான கட்டடக் கலைஞர் மற்றும் கட்டமைப்புப் பொறியியலாளரை (Stru ctural Engineer) நியமித்தார்.
வீட்டின் வடிவமைப்பு பார்ப்போரைக் வியக்க வைக்கும் வகையில் இருந்தது.
விசேடமாக, வீட்டின் முதலாவது மாடியின் மொட்டை மாடிப்பகுதியில் (First Floor Terrace), தூண்கள் எதுவுமே இல்லாமல் காம்பிரேசியாக நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிரமாண்டமான ‘கான்டிலீவர் சிலாப்”(Cantilever Slab) வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பணக்காரரின் ஆசைப்படி, தனது சொகுசுக் காரை அந்த முதலாவது மாடி பால்கனியிலேயே கொண்டு வந்து நிறுத்துவது போல(Car Park)அது வடிவமைக்கப்பட்டு, மிகத் துல்லியமாகக் கட்டப்பட்டும் முடிந்தது.
வந்ததே பயம்!
வீடு கட்டி முடிக்கப்பட்டு கார் அங்கே நிறுத்தப்பட்டதும், அந்தப் பணக்காரனுக்கு மெல்ல பயம் தொற்றிக் கொண்டது. “கீழே ஒரு தூண் (Column)கூட இல்லை, காற்றில் மிதப்பது போல இருக்கும் இந்த அமைப்பில் இவ்வளவு பெரிய காரைத் தாங்கி நிற்கிறதே. உடைந்து விழுந்துவிடாதா?” என்று யோசித்தார்.
வீட்டிற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் தங்கள் பங்கிற்கு, “என்னப்பா இது… தூணே இல்லாம கார் நிற்கிறது, பார்க்கவே பயமா இருக்கு… எப்ப வேணாலும் சரிஞ்சிடும்” என்று பயத்தைக் கிளப்பிவிட்டனர்.
பொறியியலாளர் எவ்வளவோ விளக்கியும் பணக்காரரின் பயம் தீரவில்லை. அவர் உள்ளுரில் தனக்குத் தெரிந்த, பல வருட அனுபவமுள்ள ஒரு மேசனை (Mason) அழைத்து வந்து அந்த இடத்தைக் காட்டினார்.
மேசனின் ‘முத்து போன்ற” ஆலோசனை!
அந்த இடத்தை ஆராய்ந்த மேசன், தன் அனுபவ அறிவைப் பயன்படுத்தி ஒரு யோசனை கூறினார்: “ஐயா… எனக்கும் பார்க்கப் பயமாதான் இருக்கு.
பொறியியலாளர்கள் சும்மா கணக்குச் சொல்லுவார்கள்.
நாம ஒரு வேலை செய்வோம்… இந்த ஸ்லாப்புக்கு முன்னாடி, கீழே இருந்து இரண்டு வலுவான தூண்களை (Support Columns) எழுப்பி இதோட முட்டு கொடுத்துடுவோம். அப்புறம் நீங்க நிம்மதியா தூங்கலாம். காரும் பாதுகாப்பா இருக்கும்.”
பணக்காரருக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப்போனது. பொறியியலாளருக்குத் தெரியாமல், இரகசியமாக மேசனை வைத்து அந்த கான்டிலீவர் சிலாப்பின் நுனியில் கீழ் பக்கமாக இரண்டு தூண்களைக் கட்டி, மேல் சிலாப்போடு இணைத்து முட்டுக் கொடுத்தார்.
நடந்த பேரழிவு!
தூண்கள் கட்டி முடிக்கப்பட்டு, அதன் தற்காலிக முட்டுகள் (Shuttering)பிரிக்கப்பட்ட சில நாட்களிலேயே, அந்தப் பிரமாண்டமான கார் பார்க்கிங் சிலாப் நட்டநடுவே உடைந்து அப்படியே தரைமட்டமாகச் சரிந்தது! அதிர்ஷ்டவசமாக கார் உள்ளே இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
3. அங்கே உண்மையில் என்ன நடந்தது? (தொழில்நுட்ப விளக்கம்)
பொறியியலாளர் அதை ஒரு ‘கான்டி லீவர் சிலாப்” ஆக வடிவமைத்திருந்தார். நாம் கடந்த வாரம் பார்த்தது போல, கான்டிலீவர் அமைப்பில் இழு விசை(Tension)மேல் பகுதியில் இருக்கும். எனவே, பொறியியலாளர் அந்த சிலாப்பின் மேல் பகுதி யில் தடிமனான பிரதான கம்பிகளை(Top Reinforcement) இட்டிருந்தார்.
கீழ் பகுதியில் கம்பி தேவையில்லை என்பதால் அங்கே பெயரளவுக்கே கம்பிகள் இருந்தன. ஆனால், மேசன் எப்போது அதன் நுனியில் இரண்டு தூண்களை (Columns) எழுப்பி முட்டுக் கொடுத்தாரோ, அப்போதே அந்த அமைப்பின் இயல்பு தலைகீழாக மாறிவிட்டது!
மாற்றமடைந்த இயல்பு (Behavi oral Change) :
ஒரு பக்கம் தாங்கப்பட்டிருந்த சிலாப், இப்போது இரு பக்கமும் தாங்கப்பட்ட ‘சாதாரண சிலாப்”(Simply Supported Slab) ஆக மாறிவிட்டது.
(தொடரும்)
இலங்கை பொறியியலாளர் சங்கம்,
வடக்கின் அத்தியாயம்.


