Type to search

Articles கனவு இல்லம்

கனவு இல்லம் மெய்ப்பட

Share

சிறிய தவறு மிகப்பெரிய விளைவு : கட்டுமானத்தில் நாம் செய்யும் தவறு!

அறிமுகம்: ஒரு அங்குல கவனக்குறைவு ஒரு வீட்டை அழகாகக் கட்டுவது மட்டும் வெற்றியல்ல, அதனைப் பாதுகாப்பாகக் கட்டுவதே ஒரு வீட்டு உரிமையாளரின் முதன்மை வெற்றியாகும். “எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏன் சுவர் வெடிக்கிறது?” அல்லது “புதிதாகக் கட்டிய வீட்டில் ஏன் மேலிருந்து நீர் ஒழுகுகிறது?” போன்ற கேள்விகளுக்குப் பின்னால் பெரும்பாலும் ஒரு ‘சிறிய கவனிப்புத் தவறு” மறைந்திருக்கும். குறிப்பாக, நம் வீட்டின் ஜன்னல்களுக்கு மேல் அமைக்கப்படும் ‘சன்பிளேட்”(Sunshade) மற்றும் பால்கனி (Balcony) போன்ற ‘கான்டிலீவர்”(Cantilever) அமைப்புகளில் நாம் செய்யும் ஒரு மிகச்சிறிய தவறு, உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் பாரிய விளைவை ஏற்படுத்த வல்லது.

அண்மைய சம்பவம்

அண்மையில் ஒரு பொதுக் கட்டிடத்தின் சன்பிளேட் சரிந்து விழுந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதைப் பார்த்த பொதுமக்கள், “சீமெண்ட் தரம் இல்லை”, “கம்பி போதாது”, “ஒப்பந்தக்காரர் மோசடி செய்துவிட்டார்” எனப் பலவாறு விமர்சித்தனர். ஆனால், அந்த இடத்தைப் பரிசோதித்தபோது கண்டறிந்த உண்மை அதிர்ச்சிகரமானது. அங்கே பொருட்கள் தரமாகவே இருந்தன, ஆனால் தொழில்நுட்பம் தவறாக இருந்தது.

சொல்லப்பட்ட தரத்தில் கொங்கிரீட் போடப்பட்டது, சொல்லப்பட்ட அளவில் கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், கொங்கிரீட் இடும்போது கம்பிகள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவில்லை. சன்பிளேட்டின் மேல் பகுதியில் இருக்க வேண்டிய கம்பிகள், கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. இதுவே அந்தப் பாரிய விபத்துக்குக் காரணமாக அமைந்தது.

ஏன் இந்தத் தவறு நடக்கிறது? (அறியாமை)

சாதாரண வீடுகளைக் கட்டும்போது பல உரிமையாளர்கள் மேசன்மார்களிடம் (Masons) முழுப் பொறுப்பையும் ஒப்படைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த மேசன்மார்கள் கூட சில நேரங்களில் அடிப்படைத் தொழில்நுட்பத்தில் தவறு செய்கிறார்கள்.

பொதுவாக வீட்டின் தரைத் தளம் (Floor Slab) அல்லது பீம்கள்(Beams)அமைக்கும்போது, கம்பிகளை அதன் கீழ் பகுதியில் போடுவார்கள். இதையே பழக்கமாகக் கொண்ட மேசன்மார்கள், சன்பிளேட் அமைக்கும் போதும் அதே போலக் கம்பிகளைக் கீழ் பக்கமாகவே போடுகிறார்கள். “கம்பி உள்ளே இருக்கிறதே, அது எங்கே இருந்தால் என்ன?” என்ற அவர்களின் அலட்சியமான சிந்தனைதான் ஆபத்தின் தொடக்கம்.

கொங்கிரீட்டின் பலமும் பலவீனமும்: இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனில், கொங்கிரீட் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

• அழுத்த விசை (Compression): கொங்கிரீட் என்பது ஒரு கல்லைப் போன்றது. அதன் மீது எவ்வளவு பாரத்தை வைத்து அழுத்தினாலும் அது தாங்கும்.

• இழுவிசை(Tension): ஆனால், கொங்கிரீட்டைப் பிடித்து இழுத்தால் அது உடனே விரிசலடைந்துவிடும். அதற்கு இழுவிசையைத் தாங்கும் சக்தி கிடையாது.

ஒரு கட்டிடத்தின் எந்தெந்தப் பகுதிகளில் இழுவிசை (Tension) ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் கொங்கிரீட்டுக்குத் துணையாக நாம் இரும்புக் கம்பிகளை இடுகிறோம். கம்பியின் வேலை கொங்கிரீட்டைப் பிடித்துக் கொள்வது அல்ல. கொங்கிரீட் தாங்க முடியாத இழு விசையைத் தான் தாங்கிக் கொள்வதுதான்.

சன்பிளேட்டில் என்ன நடக் கிறது?

ஒரு சாதாரண சிலாப் (Slab) நான்கு பக்கமும் சுவர்களால் தாங்கப்பட்டிருக்கும். அதன் மீது பாரம் விழும்போது அது நடுவில் கீழ்நோக்கி வளையும். அதனால் அங்கே கீழ் பகுதியில் இழுவிசை ஏற்படும். அதனால் அங்கே கம்பிகள் கீழே போடப்படுகின்றன.

ஆனால், சன்பிளேட் அல்லது பால் கனி (Cantilever) என்பது ஒரு பக்கம் மட்டுமே சுவரோடு இணைக்கப்பட்டிருக்கும். இதன் மீது பாரம் விழும்போது (அல்லது அதன் சொந்தப் பாரத்திலேயே), அது கீழ்நோக்கிச் சாய முயலும். அப்போது அதன் மேல் பகுதி இழுக்கப்படும்(Tension), கீழ் பகுதி அழுத்தப்படும்(Compression).

விதிமுறைப்படி, இழுவிசை எங்கு வருகிறதோ அங்கேதான் கம்பி இருக்க வேண்டும். எனவே, சன்பிளேட்டில் கம்பிகள் எப்போதும் மேல் பகுதியில் (Top Reinforcement) மட்டுமே இருக்க வேண்டும்.

நடுவில் போடுவதும் தவறு!

சில இடங்களில் மேசன்மார்கள் கம்பிகளை சன்பிளேட்டின் நடுப்பகுதியில் (Middle) அமைப்பார்கள். இது இன்னும் ஒரு ஆபத்தான வேலை. கம்பிகள் நடுவில் இருந்தால், அது இழு விசையையும் தாங்காது, அழுத்தத்தையும் பகிர்ந்து கொள்ளாது. இது கம்பி போடப்படாததற்குச் சமமானது. இத்தகைய அமைப்புகள் நாளடைவில் பாரம் தாங்காமல் தொய்வடையத் தொடங்கும்.

தவறான கம்பி அமைப்பால் ஏற்படும் விளைவுகள்

1. ஆபத்தான வெடிப்புகள்(Cracks): கம்பி கீழ் பகுதியில் இருக்கும்போது, மேல் பகுதியில் ஏற்படும் இழுவிசையைத் தாங்க முடியாமல் கொங்கிரீட்டில் விரிசல்கள் ஏற்படும். இந்த விரிசல்கள் மெல்ல மெல்லப் பெரிதாகி, சன்பிளேட் சுவரிலிருந்து பிரியத் தொடங்கும்.

2. நீர் ஒழுக்கு (Leakage): மேல் பகுதியில் ஏற்படும் இந்த நுணுக்கமான விரிசல்கள் வழியாக மழை நீர் உள்ளே புகும். இது கம்பிகளைத் துருப்பிடிக்கச் செய்யும். கம்பி துருப்பிடித்தால் அது வீங்கி, கொங்கிரீட்டை மேலும் உடைக்கும். இறுதியில் ஒரு நாள் எந்த எச்சரிக்கையும் இன்றி சன்பிளேட் உடைந்து விழும்.

3. முழுமையான சரிவு(Total Failure): குறிப்பாகச் சிறிய பிள்ளைகள் பால்கனியில் நின்றாலோ அல்லது சன்பிளேட் மீது பாரமான பொருட்கள் வைக்கப்பட்டாலோ, கம்பி சரியான இடத்தில் இல்லாத பட்சத்தில் அது உடனடியாக முறிந்து விழும்.

வீட்டு உரிமையாளர்களுக்கான அறிவுரைகள்

• கண்காணிப்பு: சன்பிளேட் அல்லது பால்கனிக்குக் கொங்கிரீட் போடும் போது, கம்பிகள் அதன் தடிமனில் மேல் மட்டத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

கொங்கிரீட் போடும்போது கம்பிகள் மிதிபட்டு கீழே போகாமல் இருக்க ‘கவர் பிளாக்” (Cover Blocks) பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.

• பொறியியலாளர் ஆலோசனை: “எங்கள் மேசனுக்கு எல்லாம் தெரியும்” என்று இருந்துவிடாதீர்கள். ஒரு தகுதியான பொறியியலாளர் வரைந்து கொடுத்த ‘Structural Drawing’ படி வேலை நடக்கிறதா என்று பாருங்கள்.

• தரம் மட்டும் போதாது: சீமெண்ட், மணல், கம்பி ஆகியவற்றின் தரத்திற்கு நீங்கள் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவை பொருத்தப்படும் இடத்திற்கும் (Positioning) கொடுங்கள்.

முடிவுரை

கட்டுமானத்தில் “சிறிய தவறு” என்று எதுவுமே இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன அலட்சியமும் எதிர்காலத்தில் ஒரு பெரிய செலவாகவோ அல்லது விபத்தாகவோ மாறக்கூடும். “கனவு இல்லம் மெய்ப்பட” வேண்டுமெனில், அதன் அடித்தளம் முதல் உச்சிவரை தொழில்நுட்பம் துல்லியமாக இருக்க வேண்டும்.

கம்பிகள் உங்கள் வீட்டின் எலும்புக்கூடு போன்றவை. அவை சரியான இடத்தில் இருந்தால்தான் உங்கள் வீடு நீண்ட காலம் நிமிர்ந்து நிற்கும்.

உங்கள் வீட்டின் பாதுகாப்பை ஒரு போதும் ஒரு மேசனின் யூகத்திற்கு விட்டுவிடாதீர்கள். விழிப்புணர்வுடன் இருப்போம், பாதுகாப்பான வீட்டைப் பெறுவோம்!

தொடரும்…

இலங்கை பொறியியலாளர் சங்கம்,

வடக்கின் அத்தியாயம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link