இன்று ஒரு தகவல்
Share
உயில்
அன்றைக்கு ஒருநாள் உயில் என்றால் என்ன? செட்டில்மென்ட் என்றால் என்ன? என்று பேசிக்கொண்டிருந்தேன்.
அதைக் கேட்ட சிலபேர் உயிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக பேசினால் பரவாயில்லை என்றார்கள். அதனாலே விபரம் தெரிந்தவர்களைக் கேட்டுவிட்டு அதன்பின் தான் இப்போது பேசுகிறேன்.
நேயர்கள் கேட்டிருந்த உயில் சம்பந்தமான கேள்விகளுக்கு இந்தத் தகவலிலே பதில் இருக்கிறது. தேவையானதை தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
உயில் என்றால் என்ன?
ஒரு நபர் தனக்குப் பின்னாடி தன்னுடைய சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேரவேண்டுமென்று நினைக்கிறாரோ அந்த நினைப்பை சட்டப்படி உறுதிப்படுத்துவதுதான் உயில்.
சரி! உயிலை யார் எழுதலாம்? பதினெட்டு வயது பூர்த்தியான யாரும் உயில் மூலமாக சொத்துக்களை விநியோகிக்கலாம்.
கண்பார்வை இல்லாதவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இவர்கள் எல்லாம்கூட உயில் எழுதி வைக்கலாம்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்கூட சில சமயம் புத்தி தெளிவாக இருந்தால் உயில் எழுதலாமாம். குடிபோதையிலே இருக்கிறவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக அறிய முடியாதவர்கள், நோய் நொடியிலே இருக்கிறவர்கள் – இவர்கள் எல்லாம் உயில் எழுத முடியாது.
ஒருவரை நிர்பந்தப்படுத்தி – ஏமாற்றி அல்லது சுய நினைவில்லாத ஒருத்தரிடம் எழுதி வாங்கி – வைக்கின்ற உயில் செல்லாது!
உயிலை இந்த முறையிலேதான் இந்தப் படிவத்திலே தான் எழுதணும் என்று சட்டத்திலே விதி எதுவும் கிடையாது. இதுக்கு முத்திரைக் கட்டணமும் கிடையாது.
உயிலை வெற்றுக் காகிதத்திலே எழுதலாம். அச்சடிக்க வேண்டும் – டைப் அடிக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. கையாலேயே கூட எழுதலாம்.
எழுதியிருக்கிறது புரிய வேண்டும் அவ்வளவுதான்.
குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளை வைத்துக் கொண்டு உயில் எழுதுபவர், அதிலே கையெழுத்துப் போட வேண்டும். கையெழுத்துப் போடத் தெரியாது என்றால் இடதுகைப் பெருவிரல் ரேகை வைக்கலாம்.
உயில் சாசனத்துக்கு சாட்சிகளின் கையெழுத்து இல்லை என்றாலும் அது செல்லாது.
resigned willஇற்கு மட்டும் சாட்சிகள் தேவையில்லை. அது என்ன என்றால் விமானப்படை, கப்பல் படை அல்லது யுத்தத்திலே பணிபுரியும் நபர்கள் எழுதுகின்ற உயில் அது.
அதுக்கு சில விசேட சலுகைகள் உண்டு.
ஒருவர் முதலிலே ஒரு உயில் எழுதி வைக்கிறார். அதன் பின்பு மனம் மாறிப் போகிறது. அது வேண்டாம் என்று நினைக்கிறார். ரத்து செய்து விடலாம். அதன் பின்பு வேறு உயிலும் எழுதலாம், உயிரோடு இருக்கின்ற வரைக்கும் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் உயில் எழுதலாம்.
கடைசியாக எழுதப்பட்ட உயில் சட்டப்படி சரியாக இருந்தால் அதுதான் அமுலுக்கு வரும்!
எழுதுகின்ற உயிலை இரகசியமாக வைத்திருக்கிறது எப்படி? இது ஒரு கேள்வி.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒருவர் உயிலை எழுதினதுக்குப் பிறகு அவர் தானாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமோ ஒரு கவரிலே போட்டு சீல் வைத்து, கவர் மேலே தன் பெயரை எழுதி அல்லது முகவர் பெயரை எழுதி, அதன் மேலே என்ன அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என்ற விபரமும் எழுதி சார்பதிவாளரிடம் ஒப்படைக்கலாம்.
இதற்குக் கட்டணம் உண்டு” அதன்பின் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ஒரு மனு கொடுத்து அந்தக் கவரைத் திரும்ப வாங்கிக்கலாம்.
இப்போது எழுதுகின்ற உயிலை, இவ்வளவு நாளுக்குள்ளே பதிவு செய்ய வேண்டும் என்ற காலவரையறை உண்டா? என்பது ஒரு கேள்வி.
சாதாரணமாக எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதிலே கையெழுத்துப் போட்டிருக்கின்ற திகதியிலே இருந்து 120 நாட்களுக்குள்ளே சார்பதிவாளாரிடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்ற சட்டம் உண்டு!
ஆனால் உயிலுக்கு அது தேவை இல்லை! எப்போது வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம்.
நம் ஆள் ஒருவர் ஒருநாள் ரொம்ப அவசரமாக வந்தார். இந்த உயில் எழுதுவது சம்பந்தமாக முழு விபரமும் எனக்கு உடனே தெரிய வேண்டும் என்றார். நான் உடனே அவரை வக்கீல் ஒருவரிடம் அழைத்துக்கொண்டு போனேன்.
இவர் அவரிடம் எல்லா விபரமும் கேட்டு தெரிந்து கொண்டார். ‘ரொம்பத் தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் வெளியே வந்தோம். அதன் பின்பு இவரிடம் கேட்டேன்: “ஆமாம்! இவ்வளவு விபரமாக கேட்கிறீர்களே… உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள்?” என்றேன். “ஆறு பேர் சார்!” என்றார். “சரி… இருக்கின்ற சொத்து எவ்வளவு?” என்றேன். “அதை இனிமேதான் சம்பாதிக்கப் போகிறேன்!” என்கிறார்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்.


