Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

மனப் பதட்டம்

ஒருவர் இருக்கிறார். அவர் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டு இருப்பார்.

எந்த நேரம் பார்த்தாலும் மனதுக்குள்ளே ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.

சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குத் தீர்வுகாண முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார். தூங்கும்போது சின்ன சத்தம் கேட்டாலும் ‘திடுக்” என்று தூக்கிப் போடும். முழித்துக் கொள்வார்.

இதெல்லாம் மனப்பதட்டத்தின் அறிகுறிகள், திடீர் திடீர் என்று மனதிலே ஏற்படுகின்ற பய உணர்வுகள். அதோடு கூட உடல் பாதிப்புகள். இதுதான் மனப் பதட்டம்.

நூற்றிலே 5 பேருக்கும் இந்த பாதிப்பு உண்டாம். ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்களாம்.

15 வயதிலேயிருந்து 35 வயது வரை உள்ளவர்களுக்கு இது அதிகமாக இருக்கிறதாம்.

இதெல்லாம் மருத்துவ வல்லுநர்கள் சொல்கின்ற விபரங்கள்.

அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள், அதிக மனசாட்சி உள்ளவர்கள், கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சுறுசுறுப்பாக உள்ளவர்கள், இவர்களுக்கெல்லாம் இந்தப் பாதிப்பு வருகிறது.

சராசரி மனிதனைவிட இவர்கள் புத்திசாலிகளாகக்கூட இருப்பார்களாம்!

பெற்றோர்கள் அதிகமாக பதட்டமடைபவர்களாக இருந்தால் அந்த பாதிப்பு பிள்ளைகளுக்கும் வரலாம்.

சரி! எந்த மாதிரி சூழ்நிலையிலே இந்தப் பாதிப்பு உண்டாகுகிறது தெரியுமா? நான் விரும்பியதை செய்ய முடியவில்லை! அல்லது விருப்பமில்லாததை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்!

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலே மனப்பதட்டம் உண்டாகலாம். இந்த மனப்பதட்டம் எப்படி உண்டாகுது தெரியுமா? தன்னம்பிக்கை குறையும்போது மனப்பதட்டம் உண்டாகும்! பய உணர்வு அளவுக்கு அதிகமானால் அது பதட்டமாக மாறும்.

பயம் என்பது மனிதனுக்குத் தேவைதான் அது இல்லை என்றால் வாழ்க்கையிலே எச்சரிக்கையாக இருக்க முடியாது!

ஒரு சிங்கம் எதிரிலே வருகிறது. நான் பயப்பட மாட்டேன் சார் என்று சொல்லிக்கொண்டு அது எதிரிலே போய் நிக்க முடியுமா? அதனாலே பயம் தேவை தான் ஆனால் அளவுக்கு அதிகமான பயம் தேவை இல்லை.

பயம் பதட்டமாகி, அதுவே இன்னும் அதிகமாகியது என்றால் இந்தப் பிரமை வந்துவிடுமாம். அப்படி ஆகிவிட்டது என்றால் நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாமல் போய் விடுவாங்களாம்!

அதனாலே பதட்டம் என்ற நிலையிலேயே அதைப் புரிந்து கொண்டோம் என்றால் அதை குணப்படுத்திக்கலாம்!

மனிதனுக்குப் பயம் உண்டாவதற்கு ஆறு காரணங்கள் உண்டு என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஒன்று – வயதாகி விடுமோ? என்ற பயம்.

இரண்டு – இறப்பு வருமோ? என்ற பயம்.

மூன்று – வறுமை வந்துடுமோ? என்ற பயம்.

நான்காவது – நோய் வந்து விடுமோ? என்ற பயம்.

ஐந்து – நேசிப்பவரின் அன்பை இழக்க நேருமோ? என்ற பயம்.

ஆறு -பிறர் குறை சொல்லிவிடுவார்களோ? என்ற பயம.;

இது மாதிரியான காரணங்களின் அடிப்படையிலே தான் பயம் உருவாகுதாம்.

வாழ்க்கையின் இயல்புகளைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும், உழைக்க வேண்டும். உடற் பயிற்சி வேண்டும். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இது எல்லாம் தான் அதற்குப் பரிகாரம்!

அதனாலே நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாழ்க்கையை வீணாக்காமல் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை என்பது ஒரு சுகமான பயணமாக அமையும்!

ஒருவர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குப் போனார். ஒரு சிங்கத்தைப் பார்த்து நடுங்க ஆரம்பித்து விட்டார். அங்கே அந்த சிங்கத்துக்கு ஆகாரம் போட்டுக் கொண்டிருந்தவர் சொன்னார்.

“பயப்படாதீர்கள் இது இப்போது வயிறு நிறைய சாப்பிட்டிருக்கிறது. ஒன்றும் ஆபத்து இல்லை. சிங்கம் பசியோடு இருக்கின்ற போதுதான் அடுத்தவர்கள் மேலே பாயும். இதை நீங்கள் புத்தகத்திலே படித்ததில்லையா?” என்றார்.

அதற்கு இவர் சொன்னார்.

“நான் படித்திருக்கிறேன். ஆனால், அந்தப் புத்தகத்தை இந்த சிங்கம் படித்திருக்கா என்று தெரியவில்லையே!” என்றார்?

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link