Type to search

Articles ஆலடி மாநாடு

ஆலடி மாநாடு

Share

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து விதானையார் விசுவலிங்கம் எழுந்தார்.

எங்கட வீதிகளைப் பராமரிக்க வேணும் எண்டு பலதடவை கள் ஆலடி மாநாட்டில பிரஸ்தாபித்திருந்தம்.

அதேபோல வீதிகளில ஏற்பட்ட சிறிய உடைவுகள், சேதங்களை சம்பந்தப்பட்ட அரச அமைப்புகள் திருத்தம் செய்தன.

இதனால் வீதிகளின் ஆயுட்காலம் அதிகரித்திருக்குதெண்டு தான் சொல்ல வேணும்.

இவ்வாறு வீதிகளில ஏற்பட்ட சிறு சிறு சேதங்களைத் திருத்தம் செய்த அத்தனை அமைப்புகளுக்கும் ஆலடி மாநாட்டில நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரம் வீதகளில சிறிய சேதங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாகத் திருத்தம் செய்கின்ற ஏற்பாடுகள் இருக்க வேணும்.

அந்த ஏற்பாடுகள் இருந்தால், எங்கட வீதிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.

எனினும் அவ்வாறான உடனடித் திருத்தத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறு விதானையார் கூற, இடையில் குறுக்கிட்ட மூப்பர் என்ன விதானையார் சொல்லுறியள் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் தானே அது மற்றவையளுக்கும் விளங்கும்.

விதானையார்:- யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியின்ர நடுப்பகுதியில சல்லிக் கல் லுகள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்குது.

வீதிச் சமிக்ஞை விளக்குகள் எரிகிற அந்தச் சந்தியில பாட சாலைகள் ஆரம்பமாகும் நேரத்திலும் முடிவடையும் போதும் எப்படிச் சனநெருக்கம் இருக்கும் என்பது எல் லோருக்கும் தெரியும்.

நிலைமை அப்படியாக இருக்கிற போதிலும் அந்தச் சந்தியில சல்லிக்கல்லுகள் சித றிக்கிடக்கிறதால மோட்டார் சைக்கிள்கள் சறுக்கி விழுகிற அளவில ஆபத்து ஏற்பட்டி ருக்குது.

எனவே யாழ்.வேம்படிச் சந்தியில ஏற்பட்ட சேதத்தைத் திருத்தம் செய்வதோட, அதில சிதறிக்கிடக்கிற சல்லிக் கல்லுகளையும் அகற்றி ஆபத்தில்லாத போக்குவரத்துக்கு வழி வகுக்க வேணும்.

இவ்வாறு விதானையார் கூற, அது ஆலடியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது.

பண்டிதர் பரமலிங்கம் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார். இதனை அவ தானித்த சாத்திரியார் சதாசிவம்; என்ன பண்டிதர் ஐயா! கடும் யோசனையில இருக்கிறியள் என்ன சங்கதி?

பண்டிதர்:-என்ர யோசனையயல்லாம் சொந்த யோசனையல்ல.

பொதுவான விடயங்களை நினைக்கும் போது தான் மனம் நொந்து போகுது.

கங்காணி:- என்ன பண்டிதர் ஐயா! சொல்லுறியள்.

பண்டிதர்:- யாழ்ப்பாணம் பண்ணையில இருக்கிற நாகபூசணி அம்மன் சிலை கடும் வெய்யிலுக்குள்ள இருக்குது.

இதைப் பார்க்கிற போது தான் மனம் வேதனைப்படுகுது.

சிறாப்பர்:- ஏன் பண்டிதர், யாழ்.பண்ணையில உள்ள அம்மன் சிலைக்கு ஒரு நிழல் குடை அமைக்க ஏலாதோ.

பண்டிதர்:- வெய்யிலும் மழையும் அம்மன் சிலையைப் பாதிக்குது எண்டு கருதி, அம்ம னுக்கு நிழல் குடை அமைக்க சிலர் முற்பட்டவியளாம். எனினும் அதற்கு சில அனு மதிகள் கிடைக்கவில்லை எண்டு கேள்விப்பட்டன்.

வாத்தியார்:- என்ன இருந்தாலும் யாழ். பண்ணைச் சந்தியில இருக்கிற அம்மன் சிலைக்கு ஒரு நிழல் குடை அமைத்தேயாக வேணும்.

இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள் தற்காலிக அனுமதிகளையேனும் வழங்கி அம்மன்ர சிலை வெய்யிலுக்குள்ள கிடந்து வெடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு வாத்தியார் வைத்திலிங்கம் கூற, அதனை ஆதரித்த கங்காணி கார்த்திகேயன்; குறித்த அம்மன் சிலைக்கு நிழல் குடை அமைக்கின்ற விடயத்தை உருத்திரசேனை அமைப்பு முன்னெடுக்க வேணும்.

அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அரச அமைப்புகளோட உருத்திரசேனை கதை த்துப்பேசி காரியத்தை நிறைவேற்றவேணும் என்றொரு தீர்மானத்த்தை ஆலடியில நிறை வேற்றுவம் எண்டு கூற, குறித்த தீர்மானம் ஆலடியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது. அமைதியைக் குலைக்க மூப்பர் குரல் கொடுத்தார்.

மூப்பர்:- அது சரி யாழ்ப்பாணத்தில உள்ள கோயில்களில கேரள மேளம் அடிக்கப் படுகுது என்று அறிந்தன், ஏன் இங்க இருக்கிற தவில் நாதஸ்வரங்கள் இப்ப கோயில்களில இசைக்கப்படுகிற தில்லையோ.

இவ்வாறு மூப்பர் கேட்க ஆலடியில் இருந்தவர்கள் ஒரு கணம் மூப்பரைப் பார்த்தனர்.

மூப்பரின் கேள்விக்கு வாத்தியார் பதிலளித்தார்.

வாத்தியார்:- மூப்பர் கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது, யாழ்ப்பாணத்தில கேரள மேளம் என்ற ஒரு புதிய கலாசாரம் வந்திருக்குது.

இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு எங்கட தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் தான் காரணம்.

அவர்கள் தவில் நாதஸ்வரத்திற்கு ஏகப்பட்ட ரேட் எடுக்கினம்.

அதனால் சாதாரண கோயில்களில தவில் நாதஸ்வர மங்கள வாத்தியங்களைப் பிடிக்க முடியாத நிலைமை ஏற்படுகுது.

அதிலும் கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், திருமணங்கள் நடைபெறு கின்ற சுபநாட்களில தவில், நாதஸ்வரங்களுக்குப் பெரும் தட்டுப்பாடு.

இந்த இடத்தில தான் மங்கள வாத்தியத்திற்கு இணையான இன்னொரு வாத்தியம் ஆலயங்களுக்குள்ள நுழையத் தொடங்குது.

அதில ஒன்று தான் கேரள மேளம்.

மூப்பர்:- அப்ப கேரள மேளத்திற்கு எங்கட ஆலயங்கள் பழக்கப்பட்டுப் போனால், தவில் நாதஸ்வரம் என்ற மங்கள வாத்தியம் வழக்கொழிந்து போகின்ற சூழமைவும் ஏற்பட்டு விடுமோ.

வாத்தியார்:- கட்டாயம் ஏற்படும். கேரள மேளம் இல்லையயண்டாலும் இன்னொரு இசைக் கருவி அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.

மூப்பர்:- அப்ப, வாத்தியார் இதில இருந்து தவில் நாதஸ்வரத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேணும்.

வாத்தியார்:- முதலில தவில் நாதஸ்வரத்திற்கான கட்ட ணங்களை வலுவாகக் குறைக்க வேணும்.

அதோட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில தவில், நாதஸ்வர வாத்தியங்களை முறையான டிப்ளோமா கற்கை நெறியாக ஆரம்பித்து, விருப்பமான மாணவர்கள் அந்த வாத்தியங்களைக் கற்று இசைப்பதற்கு வழி வகுக்க வேணும்.

இதற்கு எங்களிட்ட இருக்கிற தவில் நாதஸ்வர வித்துவான்களை விரிவுரையாளர்களாக அல்லது பயிற்றுநர்களாக நியமிக்கலாம்.

இதை நாங்கள் செய்யத் தவறினால், எங்கட ஈழத் திருநாட்டில் மிக சிறப்பாக உள்ள- மங்கள வாத்தியம் என்ற உயர்தகைமையைப் பெற்றுள்ள தவில், நாதஸ்வர இசையை நாங்கள் மெல்ல மெல்ல இழக்கின்ற பரிதாபத்திற்கு ஆளாக வேண்டி வரும்.

இவ்வாறு வாத்தியார் கூற, அதனைத்தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link