ஆச்சி அறிவுரை
Share
சக்கரைத் தண்ணீரும் மோரும் சர்பத்தாகிப் போனது வேதனை பேராண்டி…
வெயில் கொடுமை தாங்க இயலுதில்லை. அவ்வளவுக்குப் படு பயங்கரமா இருக்குது.
இயற்கை சமநிலை குழம்பினதுக்கான அச்சுறுத்தலே இது. ஆனாலும் தனிமனித மனமாற்றம் இல்லாமல் இந்தப் பூமியை பசுமை யாக்க முடியாது.
பேராண்டி நாங்கள் சின்னப் பிள்ளையா இருக்கிற காலத்தில சித்திரை வெயிலுக்கு தாகசாந்தி கொட்டகைகள் போட்டு, போற வாற ஆக்கள் இளைப்பாறவும் தாகம் தீர்க்கவும் ஏற்பாடுகள் செய்திருப்பினம்.
இப்ப மாதிரி சர்பத் இல்லை; சக்கரைத் தண்ணீர் – மோர் இரண்டும்தான் சக்கரைத் தண்ணீர் எண்டுறது தேசிக்காயோட சீனிக்குப் பதிலா சக்கரையைப் போட்டுக் கரைக்கிறது. சுவை அப்பிடியிருக்கும்.
வெங்காயம், மிளகாய், ஊறுகாய் போட்ட மோர்த் தண்ணி குடிக்க அமிர்தம்தான். இதுகள் உடம்புக்கு விக்கினமில்லாதது பேராண்டி. ஆனால் இப்ப தாகசாந்தி நிலையங்கள் இல்லையெண்டுதான் சொல்லவேணும்.
நல்லூர் கோவில் முன்பக்கம் பருத்தித்துறை வீதியில ஒவ்வொரு நாளும் தாகசாந்தி சேவையைச் செய்து கொண்டு வருகினம். உண்மையில அவையளைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். கோவில் திருவிழாக்களில தங்கட வித்துவத்தைக் காட்டுறதுக்கு பலபேர் பலவிதமாக சர்பத் குடுப்பினம்.
சர்பத் எண்டுற நாசத்தில ஆரோக்கியம் இருக்குதே பேராண்டி. சரி ஏதோ செய்யினமே எண்டு சந்தோசப்பட வேண்டியதுதான்.
கோவில் திரு விழாக்களில முழத்துக்கு முழம் தண்ணீர்ப் பந்தல் வைக்கிறவை இப்பிடி கோடை வெயில் கொழுத்துற நேரம் தாகசாந்தி செய்தால் எவ்வளவு புண்ணியம்.
பேராண்டி எங்கட முன்னோர்கள் சங்கடப் படலை வீடுகளைக் கட்டியிருப்பினம். அதோட தண்ணீர் தொட்டியும், மண் பானையில தண்ணீரும் எப்பவும் இருக்கும்.
நெடும்தூரம் போய் வாற ஆக்கள் தொட்டியில கால் முகம் கழுவி, தண்ணீர் குடித்து இளைப்பாறிச் செல்லலாம். அதோட கால்நடைகளும் தண்ணீர் குடிச்சு தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
எங்கட முன்னோர்கள் செய்ததை நாங்கள் இப்ப செய்யிறமா எண்டு சிந்திச்சுப் பார்க்க வேணும்.
நாங்கள் மதிலை உயர்த்திக் கட்டி, கேற்றை ஜெயில் கேற் மாதிரிப் போட்டு ஆரும் வாறதும் தெரியாமல் போறதும் தெரியா மல் இருக்கிறம்.
பேராண்டி, அண்டைக்கு ஒராளோட கதைச்சுக் கொண்டிருக்கேக்க சொன்னார்… நாங்கள் இரவு 9.30இக்குப் பிறகு கேற்றுக்கு கரண்ட் குடுத்திடுவம் எண்டு.
இப்ப சரியான கள்ளர் பயம். அதாலதான். அண்டைக்கும் கேற்றில சாஞ்ச தெரு நாயொண்டு கரண்ட் அடிச்சுச் செத்துப் போட்டுது.
கேற்றில கரண்ட் அடிக்குமெண்டு ஊருக்குள்ள ஆக்களுக்குத் தெரியும். அதால தொட மாட்டினம். கள்ளன் வந்தால் அவரின்ர கதை அவ்வளவு தான் எண்டு சொல்லிச் சிரிச்சார்.
இதெல்லாம் ஒரு மனச்சாட்சியுள்ள வேலையே பேராண்டி. கள்ளன் கெட்டவன்தான். ஆனாலும் அவனின்ர உயிர் சாதாரணமே.
அவனுக்கும் குடும்பம் குட்டி இருக்கும்தானே. இதுகளைக் கேட்க எங்களுக்குத்தான் டென்ஷன்…
ஆச்சி வருவா…


