ஆச்சி அறிவுரை
Share
கொடிகாமம் கோப்பிரட்டி தேனீர் கடையின் சிறந்த சேவைபேராண்டி…
போன வாரம் ஒரு அலுவலா மிருசுவில் வரைக்கும் போக வேண்டியிருந்தது.
வலிகாமத்திலயிருந்து இடம்பெயர்ந்து போன நேரம் எங்களுக்கு அடைக்கலம் தந்தவர் தவறிட்டார்.
அவரின்ர மரண வீட்ட போய் வரேக்குள்ள மதியமாச்சுது. சரி ஏதும் குடிப்பம் எண்டு கொடிகாமம் சந்தியில இருக்கிற பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்ர தேனீர் கடைக்குள்ள போனன்.
சரியான சனம். ஒரு பால் தேனீர், ஒரு வடை, ஒரு சூசியம் சாப்பிட்டுட்டு எவ்வளவு எண்டு கேட்டன்.
எண்பது ரூபா எண்டார் கௌண்டரில நிண்டவர். நான் சொன்னான், ஐயா நான் பால் தேனீர் மட்டும் குடிக்கேல்ல, ஒரு வடையும் சூசியமும் எடுத்தனான் எண்டு.
ஓம், பால் தேனீர் நாற்பது ரூபா, வடை இருபது, சூசியம் இருபது மொத்தம் எண்பது ரூபா எண்டார் நிதானமா.
எனக்கு வியப்பு. இந்தக் காலத்தில இப்பிடி ஒரு கடையா?
எல்லாரும் இலாப நோக்கமாகத்தான் கடை நடத்துவினம். ஆனால் கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடை மக்களுக்கு சேவை செய்யிற நோக்கோட நடந்து கொண்டிருக்கிறது பாராட்டுக்குரியது எண்டு அவையப் பாராட்டிட்டு வந்தன்.
இலாபம் எண்டுறது வேற. கொள்ளை இலாபம் எண்டுறது வேற. இப்ப கனபேர் கொள்ளை இலாபம் பார்க்க நினைக்கிறது வேதனையானது.
பேராண்டி, வீட்டு வாசலில தண்ணீர்த் தொட்டி ஒண்டு கட்டி வைச்சனியெண்டு கொம்மா சொன்னவள்.
இப்ப சரியான வெயில். ஆடு, மாடுகள், பறவைகள் தண்ணீர் இல்லாமல் கஷ்ரப்படுங்கள்.
அதுகளுக்கு தண்ணீர் வைக்க வேணும் எண்ட உன்ர காருண்ணியத்தை நினைக்க எனக்குப் பெருமையா இருக்குது.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” எண்டொரு முதுமொழியுண்டு.
ஓம் பேராண்டி, பிள்ளைகளை பெற்றார் வழிப்படுத்த வேண்டும். இல்லாட்டி பிள்ளைகள் வழிதவறிப் போயிடுவினம்.
அது பல பெற்றாருக்குத் தெரியிறதில்லை. பிள்ளைக்கு நல்லது கெட்டதைச் சொல்லிக் கொடுக்கிறது வேறை. தண்டிக்கிறது வேறை.
இதுகளைச் சரியாச் செய்யாட்டி பிள்ளை திசை மாறிடும். உனக்குத் தெரியும்தானே இப்ப இஞ்ச நடக்கிற அக்கிறுமங்கள் பற்றி. சிவ சிவா
நீதான் எங்கட சமூகத்தைக் காத்தருள வேணும்.
ஆச்சி வருவா…


