ஆச்சி அறிவுரை
Share
மகப்பேற்றுக்கு இலவசம் ஆட்டோவில் எழுதியிருந்த மகத்துவம் பேராண்டி…
நடிகர் ரஜினி காந்தின்ர பாட்ஷா படம் பார்த்தனியே? அதில ரஜினி ஆட்டோ ஓட்டுறவரா நடிச்சிருப்பார். அவரின்ர ஆட்டோவுக்குப் பின்னுக்கு “பிரசவத்துக்கு இலவசம்” எண்ட வாசகம் எழுதியிருக்கும்.
அதைவிட “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” எண்டுற பாட் டில நான் பிரசவத்திற்கு இலவசமாவாறேன் அம்மா. உன் பிள்ளைக்கொரு
பெயர் வைச்சுத்தாரேன் அம்மா…” எண்டுற வரி உலக பிரபல்யம்.
அதுக்குப் பிறகு தமிழ் நாட்டில நிறைய ஆட்டோக்களுக்குப் பின்னுக்கு இந்த வாசகம் கட்டாயம் எழுதியிருக்கும். அதை அவை கடைப்பிடிக்கிறதாகவும் கேள்விப்பட்டிருக்கிறன்.
பேராண்டி, யாழ்ப்பாணத்தில 1995 இக்குப் பிறகுதான் ஆட்டோ அறிமுகமானது. அதுக்கு முதல் என்.பி 90 மோட்டார் சைக்கிளில ஆக்களை ஏத்திக் கொண்டு போற நடைமுறை இருந்தது.
அதிலும் கிளாலியூடாக கப்பலில ஆக்கள் வெளிமாவட்டங்களுக்குப் போகிறகாலத்தில இந்த மோட்டார் சைக்கிளில நீண்ட கரியல் செய்து, அதில நாலைஞ்சு பேரை ஏத்தி “கயர்” ஓடின வரலாறெல்லாம் இருக்குது.
அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஆட்டோக்கள் இங்கால வரத் தொடங்கிட்டுது.
இப்ப கை காலுக்குள்ள தடக்குப்படுற அளவிலயெல்லோ ஆட்டோக்கள்நிக்குது.
அதிலும் வேலையில்லாமல் யாராவது இருந்தால் அவரை “ஆட்டோ ஒண்டை வாங்கி ஓடலாமே…” என்ற அறிவுரைகள் அதிகம்.
பேராண்டி, ஆட்டோ ஓடுற ஆக்கள் சரியில்லாதவை எண்டொரு கணிப்பு நீண்டகாலமாக எங்கட சமூகத்தில இருக்குது. ஒருத்தர் இரண்டு பேர் செய்யிற தவறுகள் ஒட்டுமொத்த ஆட்டோக்காரர் மேலயும் பழி விழுறதை இண்டுவரை தடுக்க முடியெல்ல.
இப்ப ஆட்டோக்களுக்கு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, தவறு செய்யிற ஆக்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெல்லாம் எடுக்கினம். இது நல்ல செயற்பாடுதான்.
இதைவிட ஒன்லைனில உருவாக்கப்படுற செயலிகள் பல யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க, அவையின்ர உழைப்பு கேள்விக்குறியாப் போயி ட்டுது.
பேராண்டி, அண்டைக்கு விளான்- கீரிமலை வீதியில ஒரு ஆட்டோவைக் கண்டன். அந்த ஆட்டோவின்ர பின்பககத்தில “மகப்பேற்றுக்கு இலவசம்” எண்டு பெரிய எழுத்தில எழுதியிருந்துது. எனக்குப் பெரும் வியப்பு. அட, எங்கட பகுதியில இப்பிடி ஒரு விடயத்தை நான் கண்ட தேயில்லை.
இப்ப பெற்றோல் ஒரு லீற்றரின்ர விலை 409 ரூபாய். அப்படிப்பட்ட நிலையில கூட அந்த ஆட்டோ உரிமையாளர் மகப்பேற்றுக்கு ஆஸ்பத்திரி போக இலவசமா கொண்டு போய் விடுறாரெண்டால் நிச்சயம் அவரைப் பாராட்டித்தானாக வேண்டும்.
“ரட்ணம்” என்று எழுதியிருந்த அந்த ஆட்டோக்காரரின்ர மனித நேயத்தை நினைக்க எனக்குப் புல்லரிச்சுது பேராண்டி. அதுபோல ஏனையவர்களும் செயற்பட்டு ஆட்டோக்காரர் கூடாத ஆக்கள் எண்டிற பிம்பத்தை உடைக்க வேணும் பேராண்டி.
ஆச்சி வருவா…


