Type to search

Articles Headlines வியாசர் பதில்கள்

வியாசர் பதில்கள்

Share

ஈரான் மீதான போர் அமெரிக்காவுக்கு வெற்றியா? தோல்வியா? வியாசரே?

பாலமயூரன் – அத்தியடி

அமெரிக்காவுக்குப் படுதோல்வி என்றே கூறுவேன். ஆம், ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்ததன் பின்னர் ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியதுமே, அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானை அழைக்கிறது.

ஆனால் ஈரானோ அமெரிக்காவுடன் பேசுவதற்கு நாம் தயாரில்லை.

எமது தலைவர்களைக் கொன்றதற்கான விளைவை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்துவிட்டே நாம் ஓய்வோம் என்கிறது.

அவ்வாறெனின் இதில் வெற்றி பெற்றது ஈரானே.

குடும்பத்தில் இளைய பிள்ளையை பெற்றோர் இளக்காரமாகப் பார்ப்பது ஏன் வியாசரே?

சாமிகா- நல்லூர்

ஒரு நாளும் இல்லை. இளைய பிள்ளை என்பது நம்பிக்கைக்குரிய, துணிச்சலான, அறிவான, எதையும் சாதகமாக சிந்திக்கும் பிள்ளை என்ற எண்ணமே பெற்றோர்களிடம் இருக்கும்.

அவ்வாறான நிலையில் அதைத் தவறாகக் கருதிவிடக்கூடாது.

இதை ஏன் நான் சொல்கிறேன் எனின், நானும் என் வீட்டின் இளையபிள்ளையே.

என் பெற்றோர் எனக்குத் தந்த அதீத தன்னம்பிக்கை உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவில் என்னை வளர்த்திருக்கிறது.

எம் இளம் சந்ததியின் எதிர்கால நிலையை நினைக்க பயமாக இருக்கிறதே வியாசரே?

தர்மலீலா- புன்னாலைக்கட்டுவன்

கலியுகம் பிறந்துவிட்டது. உலகம் அழியப் போகிறது என்று கூறும் போது, அட உலகம் எவ்வாறு அழியும் என்று சிரித்தவர்களில் நானும் ஒருவன்.

இப்போது நடப்பவற்றைப் பாருங்கள். அதிகார வர்க்கம் போர் என்ற போர்வையில் உயிர்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

நகைக்காக மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்து விட்டு, உடலை கிணற்றில் வீசிச்செல்கிறார். காதலுக்கு மாமியார் தடை. அவரை மகளுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டுகிறான் மருமகன். பொருளாதார நெருக்கடியை சாதகமாக்கி பொருட்களை கொள்ளை இலாபத்தில் விற்று சம்பாதிக்கிறான் கடைக்காரன். இது தான் உலக அழிவு.

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பிவரும். இதன் அர்த்தம் என்ன வியாசரே?

அன்ரன்- ஊர்காவற்றுறை

மனைவிகளுக்குப் பயப்படாத, அவர்கள் அடித்தால் திருப்பி அடிக்கும் கணவர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மனைவி அடித்தால் நாமும் திருப்பி அடிப்போம் என எல்லோரும் கை உயர்த்தி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஒருவன் மட்டும் கை உயர்த்தாமல் நின்றான். எமது கொள்கைகளை பின்பற்றாவிடின் நீ எமது சங்கத்தில் இருக்க முடியாது சென்றுவிடு என்றனர் அங்கிருந்தவர்கள்.

அதற்கு அவன் கூறினான் “அடப் போங்கடா இரவு அவள் அடிச்ச அடியில இரண்டு கைகளையும் தூக்க முடியலை” என்று.

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைக்கு புலம்பெயர் உறவுகளா? பெற்றோர்களா? வழிநடத்தத் தவறிய சமூகமா? யார் பொறுப்பு வியாசரே?

ஜெ.ஜெ-யாழ்ப்பாணம்

மேற்குறித்த மூன்றும் சரியான விடை. வெளிநாட்டில் இருக்கும் மாமா 17 வயது நிரம்பாத மருமகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்கப் பணம் அனுப்பினார். அதைப் பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். அவன் ஊருக்கும் உதவாமல், யாருக்கும் உதவாமல் தறுதலையாய் மோட்டார் சைக்கிளை முறுக்கித் திரியும் போது அவனை வழிப்படுத்தத் தவறி விடுகிறது எம் கேவலங்கெட்ட சமூகம். அவனைப்பிடித்து, காதைத்திருகி, காதுடைய நாலு போட்டால் திருந்தமாட்டானா என்ன?

வியாசரே ஒரு சாதாரண நபர் மாதாந்தம் ஐம்பதாயிரம் சம்பளம் பெற என்ன வேலை செய்ய வேண்டும்?

கஜீபன்- கோண்டாவில்

தம்பி கஜீபன் உழைப்பதற்கு ஆயிரம் வழி இருக்கிறது. அரச உத்தியோகத்தில் மட்டும் தான் உழைக்கலாம் என்று முட்டாள் தனமாக நம்பி, இன்று வரை புத்தகமும் கையுமாக அலையும் பல பேரைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

மேசன் முட்டாளுக்கு மூவாயிரம், புல்லு வெட்ட இரண்டாயிரம், பெயின்ற் அடிக்க இரண்டாயிரத்து ஐந்நூறு போகிறது. சாறி பிளவுஸ் ஒன்று தைப்பதற்கு இரண்டா யிரத்து ஐந்நூறு ரூபாய் என்ற உண்மை உமக்குத் தெரியுமா?

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழினத்தை ஏமாற்றியது போல ஈரானையும் ஏமாற்றுமா வியாசரே?

சுதன்- குப்பிழான்

அமெரிக்கா ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்றை நினைத்துவிட்டது.’

ஆம், போர் என்றது அமெரிக்கா. போர் வேண்டாம் என்றது ஈரான். இல்லை என்று அடம்பிடித்து போரைத் தொடக்கியது அமெரிக்கா. இப்போது மொக்கடி அடிக்கிறது ஈரான். தாக்குப்பிடிக்க இயலாத அமெரிக்கா போர் நிறுத்தம் என்கிறது. அதற்கு ஈரான் போர் நிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இன்னும் அமைதியாய் இருப்பது தான் ஏன் என்று புரியவில்லை.

அமெரிக்கா- ஈரான் போர். இலங்கை யார் கன்னை?

கணேஸ்- பருத்தித்துறை

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்கின்ற நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கிறது இலங்கை.

ஈரான் கப்பலை அனுமதித்ததும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ததையும் அமெ ரிக்கா எவ்வாறு கணித்திருக்கும் என்பதை, அமெரிக்கா போர் கப்பல் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்க இலங்கை மறுத்ததான செய்தி தெளிவுபடுத்தியிருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link