Type to search

Editorial Headlines

மனித உயிர்களுடன் விளையாடும் மருத்துவர்களின் போராட்டம்

Share

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

அதிலும் வளைகுடாப் போர் காரணமாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனூடு ஏனைய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பன மக்களின் இயல்பு வாழ்க்கையை நெருக்கடிமிக்கதாக ஆக்கி வருகிறது.

அதிலும் மின் கட்டண அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என எல்லாமும் சேர்ந்து மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்துவிட்டது எனலாம்.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையைச் சமாளிக்க அரசாங்கம் கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறது.

வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரச துறையினருக்கு விடுமுறை வழங்கி எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதுடன் வீதி விளக்குகளை ஒளிரவிடாமல் மின்சாரத்தை சேமிக்கின்ற ஏற்பாடுகளும் நடந்தாகின்றன.

இந்த நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள்சங்கம் சில கோரிக்கைகளை அரசாங் கத்திடம் முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இதில் இன்று 6ஆம்திகதி காலை 8மணிக்கு முன்னதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்பது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிபந்தனையாகும்.

அவ்வாறு அமைச்சர் பேச்சுவார்த்தை மேசைக்கு வராத பட்சத்தில், தமது பணிப்புறக் கணிப்புத்தொடரும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இங்குதான் கால சூழல் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

ஆம், அரச மருத்துவர்கள் என்போர் பொது மக்களின் வரிப்பணத்தில் மருத்துவக் கல்வியைக் கற்றவர்கள். தவிர, அவர்களின் பணிக்காக அரசாங்கம் வேதனம் வழங்குகிறது.

இதை நாம் கூறும்போது, அரச மருத்துவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கக்கூடாதா? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.

கோரிக்கைகள் முன்வைப்பது தவிர்க்க முடியாததென்பதுடன் அதனை அரசாங்கம் பரிசீலிப்பதும் கட்டாயமானது.

அதற்காக மருத்துவர்கள் பணிப்புறக் கணிப்பில் ஈடுபடுவதென்பது பொருத்தமற்ற தும் நீதிக்குப் புறம்பானதுமாகும்.

ஏனெனில் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும்போது அதனால் உடனடிப் பாதிப்புக்கு ஆளாகின்றவர்கள் ஏழை மக்கள்.

ஆம், வசதி படைத்தவர்கள் தனியார் மருத் துவ நிலையங்களையே நாடுகின்றனர்.

நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக நோய் வாய்ப்படும்போது மட்டும் அரச வைத்திய சாலைகளுக்குச் செல்கின்றனர். மற்றும்படி தனியார் வைத்தியசாலைகளையே அவர்க ளும் நாடுகின்றனர்.

ஆக,ஏழை மக்கள் மட்டுமே நூறு வீதம் அரச வைத்தியசாலைகளை – அரச மருத்துவர்களை நம்பியுள்ளனர்.

இந்த நிலையில் அரச மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு ஏழை மக்களை வஞ்சிக்குமே ஒழிய, அது அரசாங்கத்தை ஒருபோதும் பாதிக்க மாட்டாது.

ஆகையால் பணிப்புறக்கணிப்புத் தவிர்ந்த வேறு வழிகளில் அரச மருத்டுவர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பது தான் நீதியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link