பாடசாலைக் கல்வியுடன் ஒத்திசையா விட்டால்…
Share
இலங்கையில் இலவசக் கல்வியைத் தந்தவர் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா அவர்கள்.
எனினும் இலவசக் கல்வியின் தந்தை கன்னங்கரா என்பதை அறிவதிலும் அறியப் படுத்துவதிலும் நம் நாடு பின்தங்கியுள்ளது என்ற உண்மையை இங்கு கூறித்தானாக வேண்டும்.
நாட்டில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது தனியார் கல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அப்போது தனித்து பாடசாலைக் கல்வி மட்டுமே இருந்தது.
இதன் காரணமாக அன்றைய ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கற்பித்தலில் ஈடுபட்டனர். அதுபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிவுமிக்கவர்களாக இருந்து கற்றலில் அதீத ஈடுபாடு காட்டினர்.
கூடவே இணைப்பாடவிதான செயற்பாடுகள் உட்பட பாடசாலை நிகழ்வுகள், பிரார்த்த னைகள், விழாக்கள் என்பவற்றினூடு அன்றைய மாணவர்கள் தங்களின் ஆளுமையை வளர்த்துக் கொண்டதுடன் ஒழுக்கம், பண்பாடு, கலாசார விழுமியம் என்பவற்றிலும் உச்சம் தொட்டனர்.
ஆனால் நம் நாட்டில் என்று தனியார் கல்வி முறைமை அறிமுகமானதோ அன்று பாட சாலைக் கல்வி பலவீனப்படலாயிற்று.
ஆம், தனியார் கல்வி நிறுவனங்கள் பாட சாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டங்களைக் கடந்து ஒருபடி மேல் செல்ல, பாடசாலைக் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் மெல்லக் குறைவடையலாயிற்று.
அதேநேரம் ஆசிரியர்களும் மாணவர்களின் ஆர்வக் குறைவு காரணமாக தங்களின் கற்பித்தல் செயற்பாட்டை உச்சமட்டத்தில் ஆற்ற முடியாமல் போனது.
இவ்வாறாக மாற்றமடைந்த பாடசாலைக் கல்வி இப்போது ஏனோதானோ என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இதற்கு மூலகாரணம் தனியார் கல்வி நிலையங்களில் கணிசமான மாணவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகும்.
உண்மை. உயர்தரப் பரீட்சை நடைபெறுவதற்கு முதல் இரண்டு தவணைகளுக்கு முன்னதாகவே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் தவிர்க்கின்றனர்.
இத்தகைய நிலைமைகள் பாடசாலை ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கு வதுடன் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் கவனமும் கண்டிப்பும் வலுவாகக் குறை வடையக் காரணமாயிற்று.
இந்த மோசமான நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்று சிந்திக்கும்போது, சிறுவர் உரிமைச் சட்டங்கள் “மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது” என்ற மிகப்பெரும் அபத்தமான செய்தியை சமூகத்துக்கு வழங்க, பாடசாலைக் கல்வியின் பெறுமானம் தேய்வடையலாயிற்று.
இங்குதான் தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதோவொரு வகையில் பாடசாலைகளுடன் – பாடத்திட்டங்களுடன் – பாடசாலை நிகழ்வுகளுடன் ஒத்திசைந்து பயணிக்க வேண்டிய தேவை எழுகிறது.
இதைச் செய்யத் தவறுவோமாயின், ஏழை மாணவர்கள் அதீத பாதிப்பை எதிர்கொள்வதுடன் மாணவர்களின் புறச்செயற்பாடுகளும் ஆரோக்கியமற்றதாக மாறுவதற்கு வழிவகுக்கும் கவனம்.


