Type to search

Headlines Helth மருத்துவம்

எமது பிள்ளைகளை வழிநடாத்த…

Share

மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவை தான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது.

எமது பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் இல்லை. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி போன்று ஆறுமுகநாவலர் இல்லை. தியாகி பொன் சிவகுமாரன் போன்று தந்தை செல்வா இல்லை. நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை. இவர்கள் ஒவ்வொருவருமே ஆற்றலும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் தான். ஆனால் ஒருவர் போல் மற்றவர் கள் மாறுவதற்கு முயற்சிசெய்யவில்லை. ஒவ்வொருவருமே தமது பாணியில் பயணித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

துரதிஷ்டவசமாக நாம் எமது பிள்ளைகளையும் மாணவர்களையும் வழிநடாத்த அல்லது நல்வழிப்படுத்த முயலும் பொழுது இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பேசும் பழக்கத்தை வளர்த்து வைத்திருக்கின்றோம். இது ஒரு வேதனையான உண்மை.

“அவனைப்பார் 4 மணிக்கு எழும்பிப்படிக்கின்றான் ஆனால் நீ”, “அவனுடைய எழுத்தைப்பார் உன்னுடைய எழுத்தையும் பார்..”. “அவன் எழும்பி எவ்வளவு உசாராய் கதைக்கின்றான் அவனைப் பார்த்துப் பழகு..”. “அந்தக் காலத்திலே நான் என்ன மாதிரி எல்லாம் செய்தனான், ஆனால் நீ”

இவ்வாறாக ஒருவனைப் போல இன்னொருவனை படம் போட்டு மாற்றுவதற்கு கடுமையாக முனைந்து நிற்கின்றோம். எதற்கு எடுத்தாலும் ஒப்பிட்டு கதைப்பதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவனிற்கான அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் அவன் சார்ந்த அவனது நிறைகுறைகள், அவனது சுபாவம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே அன்றி ஒப்பிடும் பொறிமுறையாக இருக்க முடியாது. ஒப்பிட்டு அறிவுரை சொல்ல முயல்வது அவர் களை காயப்படுத்தி பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுவதுடன் குளிக்கப்போய் சேறு பூசிய கதைபோல அல்லது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதைபோல் ஆகிவிடுவதுடன் அது அவர்களின் பல சுகாதாரப் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.

ஒப்பிட்டு பேசுவதால் ஏற்படும் தீய விளைவுகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அவற்றில் முக்கியமானவை மனக்குழப்பம். விரக்தி, பொறாமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, கற்றல் செயற்பாடுகளில் ஆர்வக்குறைவு போன்றவையாகும். சகோதரர்களிடையே பொறாமை உணர்வு வளர்வதற்கும் இது காரணமாகிவிடுகின்றது.

பிள்ளைகளை வழிநடாத்தும் போது எமது முக்கியமான இலக்கு எதுவாக இருக்கவேண்டும் என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும். இந்த இலக்கு பரீட்சைகளில் சித்திபெறுவதா? உயர்கல்வி கற்பதா?, போட்டிகளில் வெற்றி பெறுவதா?, செல்வம் சேர்ப்பதா? அல்லது நல்ல மனம் கொண்ட மனிதாபிமானமுள்ள ஒரு மனிதனாக உருவாக்குவதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதற்கு ஒப்பிட்டுப் பேசப்படும் பேச்சு உதவியாக அமையாது.

சுயமாக ஒருவன் சிந்தித்து வாழ்வில் உயர்ச்சி அடைவதற்கு அவனில் உள்ள திறமைகள் அடையாளப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அந்தத் திசையிலே அவனை முன்னேறுவதற்கு அவன் சார்ந்த அறிவுரைகளும் வழிகாட்டல்களும் உதவியாக இருக்கும். ஆனால் இது ஒரு பொழுதும் ஒப்பிட்டுப் பேசும் பேச்சாக அமைந்து விடக்கூடாது.

சி.சிவன்சுதன்.

யாழ் போதனா வைத்தியசாலை,

பொது வைத்திய நிபுணர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link