Type to search

Headlines News World News

ஹோண்டுராஸ் நாட்டில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு – பொலிசார் உட்பட 25 பேர் பலி

Share

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் கடலோரப் பகுதிகளில் நேற்று ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல்களால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், 6 உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் உள்ள டுரிஜிலோ என்ற நகரின் ரிகோரஸ் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பனை மரத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அங்கிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பொது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் யூரி மோரா அளித்த தகவலின்படி, இந்தத் தோட்டத்தில் மட்டும் 19 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளனர்.

இந்தப் பகுதி நீண்ட காலமாக நில உரிமை மற்றும் இயற்கை வளக் கட்டுப்பாடு தொடர்பான கடுமையான உள்நாட்டு மோதல்களுக்குப் பெயர் போன இடமாகும் என தெரிவித்துள்ளனர்.
முதலாவது சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே, குவாத்தமலா எல்லைக்கு அருகில் உள்ள ஒமோவா நகரில் இரண்டாவது தாக்குதல் அரங்கேறியுள்ளது.

தலைநகர் டெகுசிகல்பா பகுதியில் இருந்து ஒமோவா நகருக்கு ‘கேங்க்ஸ்டர்’ ஒழிப்புப் பணிக்காகச் சென்று கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தை குறிவைத்து ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென பதுங்கித் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், துணை கமிஷனர் லெஸ்டர் அமடோர் உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் பொலிஸ் விசாரணைக்கு முன்பாகவே எடுத்துச் சென்றதால், பலி எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் தொடக்கத்தில் சற்று குழப்பம் நிலவியதாகக் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எட்கார்டோ பராஹோனா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link