லண்டனில் பொலிஸ் துரத்திய கார் மரத்தில் மோதி விபத்து – யாழ். இளைஞன் ஸ்தலத்தில் பலி
Share
லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் கார் விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று அதிகாலை வேளையில், லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் தவறான திசையில் அதிவேகமாகச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றை பொலிஸார் நிறுத்த முயன்றுள்ளனர்.
எனினும், அந்த வாகனம் நிறுத்தப்படாமல் சென்றதால், பொலிஸார் அதனைப் பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர்.
பொலிஸாரின் துரத்தியபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஈஸ்ட்கோட் லேன் சுற்றுச்சாலைக்கு அருகில் இருந்த மரமொன்றில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரைச் செலுத்திய 29 வயதான தமிழ் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 மற்றும் 25 வயதுடைய மற்றுமொரு இரு தமிழ் இளைஞர்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தை உடனடியாகச் சுற்றி வளைத்த லண்டன் பொலிஸ் தடயவியல் குழுவினர் மற்றும் அவசரகால பிரிவினர், பல மணிநேரமாகத் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
விபத்துக்குள்ளான வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயங்கர விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்தவர்கள் அல்லது விபத்தைக் நேரில் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால், தங்களிடம் கூடுதல் தகவல்களையோ அல்லது சிசிடிவி (CCTV) காட்சிகளையோ வழங்கி உதவுமாறு லண்டன் பொலிஸார் பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


