யாழில் படகு மற்றும் உபகரணங்களுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!
Share
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று நபர்கள் கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்தவர்களும் மற்றைய நபர் ஆழியவளையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது .
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 04 சிறு படகுகள், வெளி இணைப்பு இயந்திரங்கள், சுமார் 43 லிட்டர் மண்ணெண்ணெய், மின்கலங்கள், நீரில் மூழ்கிப் பயன்படுத்தக்கூடிய 11 மின்விளக்குகள், நங்கூரங்கள் மற்றும் 03 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கடல் வளத்தை அழிக்கும் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


