கபில சந்திரசேனவின் iphone அமெரிக்காவுக்கு!
Share
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் நவீன கைபேசியில் (iPhone) பாதுகாப்புக்காக இடப்பட்டிருந்த டிஜிட்டல் முகக் கடவையை) திறந்து விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, அமெரிக்காவிலுள்ள ‘ஆப்பிள்’தாய் நிறுவனத்திற்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன நேற்று முன்தினம் (12) உத்தரவிட்டுள்ளார்.
கபில சந்திரசேனவின் நவீன கைபேசி அவரின் முகத்தைக் கொண்டே திறக்கப்பட முடியும் என்பதால், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசேட முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தனர். ஐந்து பேர்கொண்ட விசேட மருத்துவக் குழுவின் முன்னிலையில், அவர்களின் அனுமதியுடன் கபில சந்திரசேனவின் சடலத்தின் முகத்திற்கு நேரே இந்த கைபேசி காட்டப்பட்டது. எனினும், பயோ மெட்ரிக் (Bio-metric) தொழில்நுட்பக் காரணம் காரணமாக போன் திறக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்டே நீதிவான் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கொள்ளுப்பிட்டி, பேத்ரிஸ் மாவத்தையிலுள்ள முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலுள்ள அறையொன்றிலிருந்தே கபில சந்திரசேன கழுத்து தூக்கிலிடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கிடமாக மரணமடைந்திருந்தார். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த விபரம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உப பொலிஸ் பரிசோதகர் ஜயந்த லால், உயிரிழந்த கபில சந்திரசேனவின் சடலத்தை அவரின் மனைவியின் சகோதரியான பிரியங்கி அனுஷ்கா மற்றும் வீட்டின் பணியாளரான ஆர்.எம்.சோமதாச ஆகியோர் அடையாளம் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கபில சந்திரசேனவின் கழுத்தில் இருந்த பட்டி மற்றும் குளியல் அறையில் இருந்த பட்டித் துண்டுகள் இரண்டும், சம்பவத்திற்கு முதல் நாள் வழங்கப்பட்ட ஒரே பட்டியின் துண்டுகளா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதனை வீட்டின் மற்றொரு சேவையாளரான சுசீமா பிரமிலா அடையாளம் காட்டியுள்ளார்.
அதேவேளை, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காண முடியாத மர்ம மருந்துப் பொருட்கள் மற்றும் கடதாசி துண்டுகள் குறித்தும் நீதிவான் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவை பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உடலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளுடன் சேர்த்து அவை விரைவில் அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், கபில சந்திரசேன இறுதியாக தங்கியிருந்த அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணியாற்றும் ஒரு பணியாளர் மற்றும் சாரதி ஆகியோரின் கைபேசி அழைப்பு விபரங்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கும் கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


