Type to search

Headlines Local News News

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது

Share

இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நேற்று (23) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்ததன் பின்னர், “மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்:


“கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால், அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில் நாட்டில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிச் சூழலும் உருவானது.


இதன் காரணமாக, அனர்த்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக மாத்திரம் 500 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்த நிதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியாகும். இதன் காரணமாகவே இவ்வருடத்தில் எங்களால் தேர்தலை நடத்த முடியாமல் போனது. அத்துடன், தற்போது சில புதிய சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.


ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக இருந்த சட்டரீதியான வழிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதே இதற்குப் பிரதான காரணமாகும். எனவே, தற்போது பாராளுமன்றத்தில் ஒரு குழுவை நியமித்துள்ளோம். மாகாண சபைத் தேர்தலை எந்தச் சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது குறித்து அக்குழு ஆராய்ந்து வருகிறது.


அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்துப் பரிசீலித்து, அடுத்த வருடமாகும்போது வேறு ஏதேனும் பாரிய பிரச்சினைகள் எழுவாவிடின், பெரும்பாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நம்புகிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link