அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 2,712 சிறுவர்கள்
Share
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 2,712 சிறுவர்கள் பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகபட்சமாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காக 1,025 சிறுவர்கள் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அதன் வகைப்படுத்தப்பட்ட விபரங்கள் வருமாறு:
- விசேட அறுவைச் சிகிச்சை: 593
- கண் அறுவைச் சிகிச்சை: 388
- காது, மூக்கு, தொண்டை: 266
- பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை: 240
- முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை: 133
- எலும்பு முறிவு: 48
- நரம்பியல் அறுவைச் சிகிச்சை: 19
வைத்தியசாலையின் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 18,600 அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 2020 முதல் 2024 வரையான காலப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இதய அறுவைச் சிகிச்சைத் துறை விஸ்தரிக்கப்பட்டதன் மூலம் கடந்த ஆண்டில் 2,122 பாரிய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்பவும், சேவைகளை விரிவாக்கவும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.


