நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல்!
Share
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பொருட்கள், கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் (24) இலங்கை கடற்படையினர் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான ‘வசப’ மூலம் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைவிடப்பட்டிருந்த ஆறு (06) பெரிய பைகளை கடற்படையினர் சோதனையிட்டனர்.
அந்தப் பைகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்: 500 பொட்டலங்கள், பூச்சிக்கொல்லிகள்: 2,295 பொட்டலங்கள், மருத்துவ களிம்புகள் : 2,569 பொட்டலங்கள், அழகுசாதனப் பொருட்கள்: 165 பொட்டலங்கள், வாசனை திரவியங்கள்: 64 போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டன
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் கடத்தல்கள் உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


