உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் பலி!
Share
வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருசுட்டுக்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் மோதி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விபத்தில் குருசுட்டுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் குருசுட்டுக்குளம் கோயிலுக்குச் சொந்தமான காணியைச் சுத்தப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தை இயக்க முற்பட்டபோது, அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் அந்த உழவு இயந்திரத்தைத் திருத்திக் கொண்டிருந்தபோது, அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதன்போதே அவர் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளில் கனகராயன்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


