யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீக்கான காரணத்தைக் கண்டறிக!
Share
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் மருந்துக் களஞ்சியம் தீயில் எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சத்திரசிகிச்சைக்கான மருந்துக் களஞ்சியம் தீக்கிரையாகியதில் பல கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் நாசமாகியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
குறித்த மருந்துக் களஞ்சியத்தில் தீ பரவியதற்கான காரணம் மின் ஒழுக்காக இருக் கலாம் என ஊகிக்கப்படுகிறது.
அதேநேரம், யாழ். போதனா வைத்திய சாலையின் மருந்துக்களஞ்சியத்தில் தீ பரவியது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணமுள்ளன.
எது எவ்வாறானாலும் ஒரு சம்பவம் அல்லது விபத்து நடந்துவிட்டால் அது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.
ஏனெனில் உண்மைக் காரணங்கள் மட்டுமே உண்மையானவை. தவிர, வேண்டுமென்றே புனைகின்ற காரண காரியங்கள் அல்லது ஊகத்தில் அடிப்படையில் கூறப்படுகின்ற விடயங்கள் உண்மைகளைக் கண்டறிவதற்து தடையாக இருப்பதுடன் அதனால் யாழ். போதனா வைத்தியசாலைச் சமூகத்திற்கும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
எனவே யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் குறித்து துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.
அதேநேரம் மின் ஒழுக்குக் காரணமாக ஒரு மருந்துக் களஞ்சியம் எரிந்து சாம்பலாவ தென்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
அதாவது, மின் ஒழுக்கு ஏற்படாதவாறு மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பொருத்தப்பட்ட மின் இணைப்புகள் தொடர்பில் உரிய தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அதனை ஆய்வு செய்து மின் ஒழுக்கு ஏற்படமாட்டாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவையெல்லாம் இடம்பெற்ற பின்புதான் குறித்த இடங்கள் பயன்பாட்டிற்குரியாதாக ஆக்கப்படும்.
ஆக, மின் ஒழுக்குக் காரணமாக மருந்துக் களஞ்சியம் எரிந்து, பல கோடி பெறுமதியான, சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்து வகைகள் அழிந்து போவதென்பது சாதாரணமான விடயமல்ல.
எனவே மின் ஒழுக்கு ஏற்பட்டதாயின், அது தொடர்பில் அசமந்தமாகச் செயற்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாறாக மின் ஒழுக்குத் தவிர்ந்த வேறு காரணங்கள் ஏதேனும் இருப்பின் அதனை விசாரணைகளால் கண்டறிந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் கட்டயாமானது.
அதேநேரம் மருந்துக் களஞ்சியம் எரிந்து போனதால் ஏற்படக்கூடிய மருந்துத் தட்டு ப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு சமய மற்றும் பொது அமைப்புகள், பொது மக்கள், வர்த்தக சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் தேவையான மருந்துப் பொருட் களை யாழ். போதனா வைத்தியசாலைக்குப் பெற்றுக் கொடுத்து சிகிச்சைகள் இடையூறின்றி நடைபெறுவதற்கும் ஏழை நோயாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ஆவன செய்ய வேண்டும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


