Type to search

Editorial

பரீட்சைக்கான பட்டத்தை தவிர்த்து அறிவுக்குப் பட்டம் வழங்குங்கள்

Share

சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது.

சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும்.

சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை களத்தில் இறங்கி சமகால சூழ் நிலையைக் கருத்திற்கொண்டு தமது பணி களைச்செய்ய வேண்டும்.

அதிலும் அனைத்து சைவ சமய அமைப்புகளும் ஒரே பணியை ஆற்றாமல், அனைத்து சைவ அமைப்புகளும் ஒன்றுகூடி எத்தகைய பணிகளை ஆற்றுவது – அதை எந்த அமைப்பு ஆற்றுவது என வகுத்து அதைப் பொறுப்பெடுத்து பணியை செம்மையாக நிறைவேற்றும் போது நம் மண்ணில் சைவம் தழைத்தோங்கும்.

அந்த அடிப்படையில், சைவ சித்தாந்தத்தில் புலவர் மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை முன்னெடுப்பதன் மூலம் எம் இளம் சந்ததியினரிடையே சைவ சித்தாந்த தத்துவத்தை பரவுகை செய்ய முடியும்.

இங்குதான் ஒரு விடயத்தில் நாம் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

அதாவது சைவ சித்தாந்த வகுப்புகளை நடத்துவது, பரீட்சைகளை வைப்பது, புள்ளியி டுவது, பட்டத்தை வழங்குவது என்பதான நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு சைவ சித்தாந்தப் புலவர் – சைவ சித்தாந்த கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படுமாக இருந்தால், அஃது பட்டத்தைப் பெற்றுக் கொண்டவரின் பெயரை அலங்கரிக்குமேயன்றி அதனால் சைவ சித்தாந்தத் தத்துவம் மற்றவர்களைச் சென்றடைய மாட்டாது என்பது சத்தியமான உண்மை.

ஆம், ஒரு காலத்தில் எங்கள் மண்ணில் இருந்த பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர் கள் என்போரின் தமிழ் ஆற்றல் கண்டு வியக்காதார் இல்லை.

ஆம், நம் பண்டிதர் மரபை நாம் இழந்து போனதுதான் எங்கள் தமிழுக்கு ஏற்பட்ட பேரி ழப்பு.

இப்போது வெண்பா எழுதத் தெரியாதவர் புலவர். சந்தம் அறியாதவர் கவிஞர். பாட்டும் பயனும் அறியாதவர் பண்டிதர் என்பதாக நிலைமை வந்துவிட்டது. (எனினும் சிலர் விதிவிலக்கு என்பதையும் கூறித்தானாக வேண்டும்.)

இத்தகையதொரு நிலைமையை மேலும் உருவாக்காமல், சைவ சித்தாந்தக் கற்கை என்றால் அதில் பங்குபற்றுபவர்கள் அதில் துறைபோனவர்களாக ஆக்கப்பட வேண்டும்.

சைவ சித்தாந்தத்தை ஆற்றொழுக்காக அள்ளித்தர வேண்டும். அவர்களின் சைவ சித்தாந்த விளக்கவுரைகள் கேட்போரை நெக்குருக வைக்க வேண்டும். இந்த நிலைமை ஏற்படுவதாக சைவ சித்தாந்தத்தைப் போதியுங்கள். சைவ சித்தாந்த அறிவாளிகளை உருவாக்குங்கள்.

நீங்கள் வழங்குகின்ற புலவர் மற்றும் கலாநிதி பட்டங்கள் பெறுபவர்களால் பெருமை பெறட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link