Type to search

Editorial

நிறைவான சாரத்தியப் பயிற்சி வழங்குவதை உறுதி செய்க!

Share

வட மாகாணத்தில் சாரத்தியம் என்பது மிக மோசமான நிலையில் இருப்பதைக் காண முடிகிறது.

அதாவது, சாரதிகளில் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை.

தவிர, வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதிப் பத்திரம், வரி அனுமதிப்பத்திரம், சாரத்திய அனுமதிப் பத்திரம் என்பவற்றை முறையாக வைத்திருப்பதும் இல்லை.

இதன்காரணமாக பொலிஸார் எந்த வாகனத்தை இடைமறித்தாலும் அந்த வாகனம் தொடர்பில் தண்டப்பணம் விதிக்கக்கூடியதாக இருக்கிறது.

இவ்வாறான பொறுப்பற்ற சாரத்தியம் ஏற்படுவதற்குக் காரணம் சாரத்தியப் பயிற்சி நிலையங்கள் அவர்களுக்குப் போதிய பயிற்சிகளை வழங்குவதில்லை.

உண்மையில் சாரத்தியப் பயிற்சி என்பது போக்குவரத்து விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது வாகனங்களைச் செலுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவது என இரண்டு வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருந்தும் எங்கள் வட மாகாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளைப் போதிக்கின்ற வகுப்புகளை சாரத்தியப் பயிற்சி நிலையங்கள் பெரும்பாலும் நடத்துவதில்லை.

இதனால் பெரும்பாலான சாரதிகளுக்கு வீதி விதிமுறைகள் தெரியாமல் இருக்கின்றன.

எனினும் அவர்கள் சாரதிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக நடை டபெறுகின்ற பரீட்சையில் சித்தியடைகின்றனர்.

அவ்வாறு யாழ்ப்பாணத்தில் சித்தியடையாவிட்டால், மன்னாரில் சித்தியடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

இதற்கும் மேலாக, சாரத்தியப் பயிற்சியும் திருப்திகரமாக இருப்பதில்லை என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.

இருந்தும் சாரத்திய அனுமதிப் பத்திரம் வழங்குவதற்குரிய பரீட்சகர் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கான சிபார்சை செய்து விடுகிறார்.

இங்குதான் சாரத்தியப் பரீட்சகர்களுக்கும் சாரத்தியப் பயிற்சி வழங்குகின்ற நிறுவனங்களுக்குமிடையில் எழுதாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதை ஊகிக்க முடிகிறது.

என்னசெய்வது உரிய பயிற்சிகள் வழங்கப்படாமல் பணத்தின் அடிப்படையில் எல்லாம் நடந்தாவதால் எத்தனையோ அருமந்த மனித உயிர்கள் வீதி விபத்துக்களில் காவுகொள்ளப்படுகின்றன.

எனவே பணத்தினால் சாரத்திய அனுமதிப் பத்திரம் எடுக்கின்ற அநியாயத்தை – கொடுமையை நிறுத்தி, போதிய – திருப்திகரமான சாரத்தியப் பயிற்சிகளை வழங்கி நிறைவான பரீட்சிப்புக்களினூடு சாரதிய அனுமதிப் பத்திரம் (licence) வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

அதேவேளை வாகனங்களுக்கான காப்புறுதிப் பத்திரம், வரி அனுமதிப்பத்திரம் என்பன காலாவதியாவது குறித்து தொலைபேசிக் குறுந்தகவல் மூலம் முன்னறிவித்தல் வழங்குகின்ற நடைமுறையை காப்புறுதி நிறுவனங்களும் பிரதேச செயலகங்களும் மேற்கொள்வதன் மூலம் தண்டப்பணம் செலுத்துவதில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்.

ஆகையால் இது விடயத்திலும் சம்பந்தப் பட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link