தையிட்டி காணி விவகாரம் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்
Share
தையிட்டி விகாரை தொடர்பில் நீண்டு வரும் சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காண முடிய வில்லை.
ஆம், தையிட்டி விகாரை என்பது எமது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.
அதேநேரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதற்காக அதனை உடைப்பதென்பதும் ஏற்புடையதன்று.
உண்மை. சரி பிழைகளுக்கு அப்பால், வணக்கஸ்தலம் உடைக்கப்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
ஆக, தையட்டி விகாரையும் இருக்க வேண்டும். அதேநேரம் தையிட்டி விகாரைக்கென கையகப்படுத்திய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்து குறித்த பிரச்சினைக்குத் தீர்வும் காணப்பட வேண்டும். இதுவே யதார்த்தம்.
தையிட்டி விகாரை கையப்படுத்திய காணிகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் விவகாரத்தில் தையிட்டி விகாராதிபதி எதிர்க்கருத்தைக் கொண்டுள்ளார் என்பதும் தெட்டத்தெளிவானது.
அதேநேரம் பிரஸ்தாப காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகரும் யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனம் உறுதியாக உள்ளனர் என்பதும் இங்கு குறித்துரைக்கப்பட வேண்டிய விடயம்.
இது ஒருபுறமிருக்க ஏலவே தையிட்டி காணிகளை அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதனத் தடுத்து நிறுத்துகின்ற சதிவேலையை தையிட்டி விகாராதிபதி மேற்கொண்டிருந்தார்.
ஆம், தையிட்டி விகாரை அமைந்த பகுதிகளில் உள்ள காணிகள் அளவீடு செய்யப் படுவதைத் தடுக்க வேண்டுமென தையிட்டி விகாராபதி முறைப்பாடு செய்ய, அந்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பலாலி பொலிஸார் காணி அளவீட்டுக்குத் தடை விதித்தனர்.
இந்நிலையில் மீளவும் காணிகளை அளவீடு செய்வதற்கு அமைச்சர் சந்திரகேர் உட்பட யாழ்.மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலி.வடக்கு பிரதேசசபை, நிலஅளவைத் திணைக்களம் எனச் சம்பந்தப்பட்ட அமைப்புகள் எடுத்த கடும் பிரயத்தனம் காரணமாக மீளவம் தையிட்டிக் காணிகளை அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இருந்தும் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி மீளவும் காணி அளவீடு செய்வதற்காக யாழ். அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றபோது, காணி அளவீடு தொடர்பில் சில கடிதங்களை தமக்குக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காணி உரிமையாளர்கள் காணி அள வீட்டை தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இங்குதான் தையிட்டிக் காணிகளை அளவிடுவதற்கு தையிட்டி விகாராதிபதியும் காணி உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஆச்சரியத்தைத் தருகிறது.
எதுஎவ்வாறாயினும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் காணி உரிமையாளர்கள் தக்கமுறை யில் பயன்படுத்த வேண்டும். இல்லையேல காலம் கடந்தால் எதிர்விளைவை நமக்குத் தரும் என்பதை அனுபவ ரீதியில உணர்ந்து கொள்ளுங்கள்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


