சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்து வர வேண்டும்
Share
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முதன் முதலில் தகவல் வழங்கியவர் மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ என்பது தெரிந்த உண்மை.
யாழ்ப்பாணம் செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டு என அவர் தெரிவித்ததன் காரணமாக அவர் செம்மணிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
எனினும் புதைகுழி உள்ளதாக அவர் அடையாளம் காட்டிய இடத்தை அகழ்ந்த போது, அங்கு என்புக்கூடுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சோமரத்ன ராஜபக்ஷவின் த வல்கள் குறித்த கவனம் பெரிதுபடவில்லை.
ஆயினும் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் கட்டுமானப் பணியின் பொருட்டு அங்கு அத்திபாரம் வெட்டப்பட்ட போது, என்புக் கூடுகள் வெளிவந்ததையடுத்து அத்திபாரம் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டு குறித்த விவகாரம் பொலிஸ் ஊடாக நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது.
இச்சம்பவம் நடந்த போது, இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமையப்பெற்றிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவில் அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.
மேற்படி அகழ்வுப் பணிகளின் போது இது வரை 412 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதுவரை 412 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட அதிர்ச்சியில் நம் மக்கள் உறைந்திருக்கும் வேளையில், செம்மணி பகுதியில் மேலும் சில இடங்களில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ தற்போது கூறியிருப்பது பேரதிர்ச்சியைத் தருவதாகும்.
ஆம், செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டு என ஏலவே நீதிமன்றில் சோமரத்ன தெரிவித்திருந்ததுடன், தான் செம்மணியில் படைமுகாமில் கடமையாற்றிய போது இராணுவ அதிகாரிகள் தமிழ் இளைஞர்களைச் சுட்டு உயிரிழந்த உடலங்களை செம்மணிக்கு அனுப்பி அவற்றைப் புதைக்குமாறு கட்டளையிடுவார்கள் எனவும் கூறியிருந்தனர்.
அவர் கூறிய வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் உறுதி செய்வதாக உள்ளன.
நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது மீண்டும் சோமரத்ன ஒரு செய்தியைக் கூறியுள்ளார்.
ஆம், செம்மணியில் இன்னும் மனிதப் புதைகுழிகள் உண்டு என்பதே அந்த அதிர்ச்சித் தகவலாகும்.
ஆக, சோமரத்ன ராஜபக்ஷ கூறிய மேற்போந்த தகவலின் பிரகாரம் அவரை செம்மணிக்கு மீண்டும் அழைத்து வந்து அவர் மூலம் குறித்த இடத்தை அடையாளம் காட்டுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்தாக வேண்டும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


