Type to search

Editorial

சிங்களத் தரப்புக்களிடம் ஏற்படுகின்ற மனமாற்றம்

Share

வன்னி யுத்தத்தின் போது வடபகுதி மக்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சிங்களவர் கூறியிருப்பதன் மீது நாம் கவனத்தையீர்க்க வேண்டும்.

ஆம், முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்து விட்டதா? என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம் கொழும்பு செடெக் நிறுவன மண்டபத்தில் ஏற்பாடு செய்த சிறப்புக் கருத் தரங்கில் உரையாற்றிய சம இயக்கத்தின் அமைப்பாளரும் முற்போக்கு சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமாகிய இந்திரானந்த டி சில்வாவே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தனது உரையில், வன்னி யுத்தத்தில் வடபகுதி தமிழ் மக்கள் பேரிழப்புகளைச் சந்தித்தனர் என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2009 ஆம் ஆண்டிற்குப் பின்பான மே 18 ஐ சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வெவ்வேறு விதமாக நினைவு கூருகின்றனர்.

சிங்கள மக்கள் இந்நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வேளையில், எமது சகோதர தமிழ் மக்கள் பெரும் சோகத்துடன் நினைவு கூரும் ஒரு நாளாகவே இந்நாள் உள்ளது.

இங்கு மே 18 என்பது மகிந்த ராஜபக்­ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்று வதற்கு மாத்திரமே தென்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பில் நாம் யாரும் பேசுவதில்லை.

தவிர, யுத்தத்தின் இறுதிக் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர், யுவதிகள் இன்றளவும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிங்கள மக்களால் யுத்த வெற்றியைக் கொண்டாட முடியாது.

கடந்த கால ஆட்சியாளர்கள் மே 18 நினை வேந்தலை வடக்கிற்கு எதிராக – தெற்கு மக்களின் மனங்களில்  இனவாதத்தைத் தூண்டும் நோக்கிற்காகவே பயன்படுத்தினர் என அவர் கூறியிருப்பது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனமாற்றத்தை – உண்மைகளை எடுத்துக் கூறுவது தான் இந்த நாட்டில் சமாதானம் நிலைப்பதற்கான ஒரே வழி என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை சுட்டுகிறது.

இங்கு தான் தமிழ் மக்கள் தொடர்பில் உண்மைகளை எடுத்துரைக்கக்கூடிய சிங்கள அரசியல்வாதிகளை – சிங்கள அமைப்புகளை நாம் இனங்கண்டு அவர்களை எங்களுக்கான சாட்சியங்களாக – பலமாக ஆக்க வேண்டும்.

எனினும் எங்கள் தமிழ் அரசியல் தரப்புகள் அது விடயத்தில் எந்தக் கருசனையும் கொள்வதில்லை. இதை இன்னும் சுருக்கமாகக் கூறுவதாயின், சிங்களவர் மத்தியில் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வல்லவர்களை நம்மவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை.

இங்கு தான் தமிழர் அரசியல் பலவீனப்பட்டு நிற்கிறது. ஆம், தமிழ் மக்களுக்கு யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகளை சிங்களத் தரப்புகள் மூலம் சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்துகின்ற முறைமையை இனியேனும் நாம் பின்பற்ற வேண்டும்.

அதற்கு இந்திரானந்த டி சில்வா போன்ற நேர்மையான சிங்களவர்களை நாம் துணைக் கோடல் அவசியம்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link