சக்கடத்தார் ஏறிய குதிரையில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை
Share
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை என்ற ஒரு புதிய அமைப்பு களத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நல்ல விடயம். ஆயினும் “பேரவை” என்ற சொற்பதம் தமிழ் அரசியலில் இருந்து நீக் கப்பட முடியாதது போல தமிழ்ச் சட்டத்தரணி களும் பேரவை என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.
உண்மையில் பேரவை என்ற சொற்பதத்தை விலக்கி ஒரு புதிய பெயரை சூட்டியிருந்தால், அது ஒரு புதிய சிந்தனையாக – மாற்றமாகக் கருதப்பட்டிருக்கும்.
என்ன செய்வது “வலம்புரி” என ஒரு பத்திரிகை நிறுவனம் இயங்கும்போது, “வலம்புரி” என ஒரு ஹோட்டலுக்கு பெயர் சூட்டுகின்ற மட்டுப்பாடான மனநிலைப் பண்பாடு நம்மிடமிருந்து விடுபட வேண்டும் என்பதனடிப்படையில் பேரவை என்ற சொல்லை நீக்கி, குறித்த தமிழ்ச் சட்டத்தரணிகள்; தங்கள் அமைப்புக்கு பெயர் சூட்டியிருக்கலாம் என்பது நம் தாழ்மையான கருத்து.
பரவாயில்லை. ஒரே போக்கில் சிந்திப்பது – ஒரே போக்கில் கோயில் கட்டுவது – ஒரே போக்கில் வீடு அமைப்பது தானே எங்களின் காலா காலக் கலாசாரம் என்பதால், அதனை மாற்றுவதற்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் சங்கம் துணிந்திலைப் போலும்.
சரி, பெயரில் எதுவும் இல்லை. காரியம் ஆகினால் அதுபோதும் என்று யாரேனும் வாதிட்டால் அதற்கும் நாம் உடன்பாடு என்பதுடன் அஃது ஒருபுறமிருக்க, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் ஒன்றை தமிழ்ச் சட்டத் தரணிகள் பேரவை தயாரிக்க முற்பட்டிருப்பது தான் ஏன்? என்று தெரியவில்லை.
காரணம், ஏலவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. கூடவே அந்த தீர்வுத் திட்ட முன்மொழிவை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது தவிர, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்டம் அரச தரப்பிடமும் வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் பௌத்த பீடாதிபதிகளிடமும் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை என்ற ஒரு புதிய அமைப்பு; அதிரடியாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கென களத்தில் இறங்கி இருப்பதுதான் பலத்த ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது.
ஆம், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் என்பது அடியோடு மாற்றப்படக்கூடியதன்று. மாறாக சிறு திருத்தங்கள் மட்டுமே செய்யக் கூடியவை.
ஆக, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்டத்தை செம்மைப்படுத்துதல் என்பதா கவே தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் கடமைப்பாடுகள் இருக்க வேண்டும்.
இதைவிடுத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்ட முன்மொழிவைப் புதிதாகத் தயாரிப்பது போல காட்டிக்கொள்ள நினைப்பது, முன்னைய உழைப்புகளை – அர்ப்பணிப்புகளை – தேடல்களைக் களங்கப்படுத்துவதுபோலவும் உதாசீனம் செய்வதுபோலவுமே நிலைமை இருக்கும் என்பதை குறித்த தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்றும்படி தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி நீங்களும் சக்கடத்தார் ஏறிய குதிரையில் ஏறுகிறீர்கள்.
கவனம் குதிரையில் இருந்து சறுக்கி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


