ஓடமும் ஒரு நாள் வண்டியில் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில்
Share
நம் முன்னவர்கள் கூறி வைத்த தத்துவங்கள், பொன்மொழிகள், பழமொழிகள் ஆன எவையும் பொய்த்தவை அல்ல.
ஆம், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதன் உள்ளார்ந்தம் ஊள்வினைப் பயன்களும் என்பதாகும்.
இதுபோல ஐயன் வள்ளுவன் நமக்குத் தந்தருளிய திருக்குறள், தமிழ் மூதாட்டி ஒளவையார் நமக்கீந்தளித்த நீதி செயல்கள், பட்டினத்தடிகளின் நிலையாமைத் தத்துவங்கள் என அனைத்துமே நிஜமானவை.
அவற்றின் உண்மைகள் ஒருபோதும் பொய்க்க வில்லை – பொய்ப்பதுமில்லை.
அந்த வகையில், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற நம் தமிழ் கூறும் தத்துவம் எத்துணை அற்புதம்.
ஆம், எங்கள் சொற்ப வாழ்க்கைக் காலத்தில் அத்தனை உண்மைகளை கன்ம வினைப் பயன் சூழ்ந்த சம்பவங்களை நேரில் கண்டும் அறிந்தும் அனுபவித்தும் உள்ளோம்.
அந்த வகையில் நாம் கண்ணுற்ற சம்பவங் கள் பலவற்றை முன்னிறுத்த முடியும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
அதாவது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற நிலையிலேயே அவருக்கு இப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன் பிரசன்னமாகி வாக்குமூலம் வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தள்ளாடித் தள்ளாடி மெல்ல மெல்ல நடந்து சென்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன் வாக்குமூலம் வழங்குவார் என்று அப்போது யாரேனும் நினைத்திருப்பார்களா என்ன?
அந்தோ! இந்த நாட்டின் ஆட்சி இனி ராஜபக்க்ஷக்களிடமே என்ற மமதையோடு, காங் கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகையைக் கட்டியவர் மகிந்த ராஜபக்ஷ.
தவிர, அவர் ஜனாதிபதியாக இருந்த போது காங்கேசன்துறைக் கடலில் நீச்சல் அடித்து… அடடா எப்படியயல்லாம் இருந்தவர். இப்போது நீதிமன்ற வாசல்படி ஏற வேண்டியதாயிற்று.
காங்கேசன்துறையில் இருந்த சித்தர்கள் யோகிகளின் ஜீவசமாதிகளை உடைத்து எறிந்து அதன்மேல் கட்டிய காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகை இப்போது பாழடைந்து போனது.
ஆனால், நம் சித்தர்களின் ஜீவ சமாதிகளின் கீர்த்தி எத்துணை என்பதை அதிலிருந்தேனும் அறிதல் அவசியம்.
இதைவிட இன்னுமோர் வியப்பு நடந்தாயிற்று.
ஆம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி அநுர அரசாங்கம் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என ஒரு குரல் ஒலிக்கிறது.
யார் அது? என்றார் வேறு யாருமல்ல மகிந்தவின் ஆட்சியில் முப்படைத் தளபதியாக இருந்த வன்னிப் போரை நிறுத்தி, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம் என்ற செய்தியை ஜனாதிபதி மகிந்தவிடம் கம்பீரமாக நின்று தெரிவித்த சரத் பொன்சேகா தான் எனும்போது தான் “யார் பெறுவார் அச் சோபே”, என்ற ஞான நிலை எமக்குள் எழுகிறது.
ஆட!, இது மட்டுமா என்றால், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே படும்பாட்டை கண்காள் காண்மின்களோ.
ஆம், தாங்க முடியாத சித்திரைவதை, அதனால் சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறுமளவில் சுரேஷ் சலே தான் செய்ததை அனுபவிக்கிறார்.
இதை நாம் கூறும் போது சான்று ஏதும் உண்டோ என்று நீங்கள் கேட்டால், நான் சிறையில் அடைபடுவதற்கும் என் மனைவியை புலனாய்வினர் தடுத்து வைத்து விசா ரிப்பதற்கும் சுரேஷ் சலே தான் காரணம் என்கிறார் சரத் பொன்சேகா.
நடக்கட்டும் நடப்பதைக் காண்போம்.
வளலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


