Type to search

Editorial

அநுரவின் அரசாங்கம் வடக்கை ஓரங்கட்டி விட்டதா?

Share

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வடக்கு மாகாணத்தை ஓரங்கட்டி விட்டது போன்றதான தோற்றப்பாடு தெரிகிறது.

ஆம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தென்பகுதி மாகாணங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுகிறார். கூடவே அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து தென் மாகாணங்களின் அரச நிர்வாகச் செயற்பாடுகளை மீள் வலிமைப்படுத்துகிறார்.

இது தவிர, அரச கணக்காய்வுத் திணைக்களம் அங்குள்ள அரச அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்வதுடன் தேங்கியுள்ள அரச பணிகளை விரைந்து நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

ஆனால் சுயநிர்ணய உரிமையைக் கேட்டதற்கான தண்டனை போல வடமாகாணம் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அதாவது நீங்களும் உங்கள் பாடும் என்பது போல மத்திய அரசு எங்களை ஒதுக்கி விட, இங்குள்ள அப்பாவிப் பொதுமக்கள் அரச நிர்வாக இயந்திரத்திடம் இருந்து சேவையைப் பெறுவதற்காக ஆற்றலைகின்றனர்.

உண்மை. வடமாகாண மக்கள் அரச திணைக்களங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய அலுவல்களைச் செய்து முடிப்பதில் பெரும் இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். எனினும் இதுபற்றி எவரும் கவனிப்பதாக இல்லை.

உண்மை. வடமாகாணத்தில் மாகாணக் கணக்காய்வுத் திணைக்களம் உள்ளதாயினும் அதன் மேற்பார்வையூடாக இங்குள்ள நிர்வாகங்களைச் செம்மை செய்ய முடியவில்லை.

ஆம், வடமாகாணத்தில் ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கான ஓய்வூதியத்தை உரிய காலத்தில் பெற முடியாமல் உள்ளனர்.

ஓய்வூதியத் திணைக்களத்தின் நிகழ்நிலைத்தளத்தினூடாக தகவல்களை ஏற்ற முடியாதவாறு குறித்த நிகழ்நிலைத்தளம் மூடப்பட்டுள்ளதான தகவலோடு முகாமைத்துவ உதவியாளர்களின் கருமம் முடிந்து விடுகிறது.

இதனால் ஓய்வு பெற்ற பலர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அலைகின்றனர்.

உண்மை. ஓய்வுபெற்ற ஒருவர் ஒருமாத கால இடைவெளியில் தனக்கான ஓய்வூதியத் தைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் செய்ய வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடாக இருக்க, நடைமுறையில் மாதங்கள் பல கடந்தும் ஓய்வூதியம் பெற முடியாத அவலத்தில் இங்கு பலர் உள்ளனர். இதுபோல பல்வேறு விடயங்களை அரச அலுவலகங்கள் சார்ந்து கூற முடியும்.

எனவே இது விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், அரச அலுவலகங்களில் சேவைகளைப் பெறமுடியாது அலைக்கழியும் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகளைப் பெற்று அதற்குரிய தீர்வை உடனடியாக வழங்கும் பொருட்டு விசேட ஏற்பாடுகளை – விசேட தொடர்பாடல் இலக்கங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

இதற்கு மேலாக, மத்திய அரசின் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் கணக்காய்வுத் திணைக்களம் என்பன வடமாகாணத்தில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அரச நிர்வாகம் எப்படியாக வடக்கில் உள்ள தென்பதை அறிவதும் அவசியம்.

இதைச் செய்யாவிடில், வடக்கின் அரச நிர்வாகம் விரைவில் பாரிசவாதப்படும் இது நிறுதிட்டமான உண்மை.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link