Type to search

Articles வியாசர் பதில்கள்

வியாசர் பதில்கள்

Share

1) திருவிழா என்னும் பெயரில் வீதிகளில் மின்குமிழ்களைக் கட்டி பணத்தையும் வளத்தையும் அழிப்பவர்கள் திருந்த மாட்டார்களா?

அன்புமகேஸ்- ஆறுகால்மடம்

எம் தமிழ்ச்சனத்திடம் இருக்கும் பிரச்சினையே அடுத்த வீட்டுக்காரனை எட்டிப் பார்ப்பது தான்.

அவன் என்ன செய்கின்றானோ அதை விட நான்கு மடங்கு தான் அதிகமாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணம் பணத்திமிர். என்னிடம் பணம் இருக்கிறது நான் எதுவும் செய்வேன் என்று அதை தண்ணியாய் செலவு செய்வது.

பழி தீர்த்தல். இந்த முறை அவன் நூறு பல்ப் கட்டினால் அடுத்த முறை நான் ஆயிரம் கட்டுகின்றேன் பார். என்ற பழி தீர்க்கும் மனோபாவம்

இவையயல்லாம் பொது மக்களுக்கு இடைஞ் சலையும் இன்னலையும் தருகின்றது. என்பது அவர் மர மண்டையில் ஏறாதது ஏனோ?

2) பாடகர் சங்கீத்தனை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்லுபவர்கள் தொடர்பில்…?

ராஜ்- யாழ்ப்பாணம்

ஒரு பாடலை பாடினான் என்று அவனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தது அரசு .

அவன் சிறையில் வாடிக் கொண்டிருக்க இங்கு சில தற்குறிகள் சிரித்து கனைத்து காணொளி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆயினும் சங்கீத்தனன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுபவர்கள் எம்மில் இருக்கவே செய்கின்றனர்.

தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம் உண்பதைத் தவிர வேறு எதற்கும் வாய்திறக்க கூடாது என எண்ணும் பேரினவாதம் எவ்வளவு வன்மம் நிறைந்தது.

3) முதியவர்கள் குடும்பத்தின் முதுகெலும்பே. அவர்கள் இந்தப் பூமிக்கு பாரமில்லையே?

விஜயகுமார்- யாழ்ப்பாணம்

உண்மை. முன்னைய காலங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு முதுசம் இருந்தே தீரும்.அந்த முதுசம் அந்தக் குடும்பத்தின் மூல வேராய் இருக்கும்.

என்றைக்கு எம்மில் நவீனம் தொற்றிக் கொண்டதோ அன்று எமக்கு அழிவு தொடங்கிவிட்டது.

அதன்வழி முதியோர் இல்லங்கள் முழைத்தன. அந்த இல்லங்களில் முதியவர் எண்ணிக்கைகள் அதிகரித்தன.

யாரை நாம் முதுசம் என வீட்டில் வைத்திருந்தோமோ அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு நாம் மகிழ்வாய் இருப்பதாயும் பாதுகாப்பாய் இருப்பதாயும் நினைத்துக் கொள்கின்றோம். ஆனால் அது உண்மையில்லை.

4) வீரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்கள் இனவாதம் பேசுவதை நிறுத்த மாட்டார்களா?

தமிழ்- யாழ்ப்பாணம்

ஓர் அரசன் பூனை ஒன்றை வளர்த்தான். அவன் உணவருந்தும் போது அந்தப் பூனையின் தலையில் விளக்கேற்றி வைத்து விட்டே உணவருந்துவான்.

தன் பூனை அவ்வளவு சிறப்பென்று புகழுவான். ஒருநாள் மன்னன் உணவருந்தும் போது மந்திரி ஒரு எலியை உணவு மேசையில் விட்டான்.

அவ்வளவுதான் பூனை தலையிலிருந்த விளக்கை எகிறிக் கொண்டு மன்னனின் உணவைத் தட்டிவீழ்த்தி எலியைப் பிடிக்க ஓடியது.

அப்போது மந்திரி கூறினான். மன்னா ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு பிறவிக்குணம் உண்டு அது மாறவே மாறாது என்று.

விரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்களின் பிறவிக்குணமது. நாம் என்னத்தை செய்துவிட முடியும்.

5) செம்மணியில் தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றனவே?

சுதன்-குப்பிழான்

இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணி புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும், தோண்டும் போது புதிய என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்படும் போது நெஞ்சம் பதை பதைக்கின்றது.

ஒன்றின் மேல் ஒன்றாய், பிணைக்கப்பட்டு அருகருகே என பல்வேறு வகைகளில் என்புக் கூடுகள் என்பதும் அது சிறுவர்களுடையது என்பதும் நெஞ்சம் உலுக்குகிறது.

ஆயினும் செம்மணிப் புதைகுழி என்புக் கூடுகள் தொடர்பில் வன்மம் நிறைந்த கருத் துக்களை பெரும்பான்மை இனவாதிகள் சமூக வலைத்தளங்களினூடே பரப்பிக் கொண்டிருப்பது மனச்சாட்சியற்றது.

6) அமெரிக்காவும் ஈரானும் போரை நிறுத்துவார்கள் போலத் தெரியவில்லையே.

சிவம்-வதிரி

இரு நாடுகளுக்குள்ளே போர் நடைபெறுவது சகயம்.

அதில் ஒன்று வெல்லும் மற்றையது தோற்கும். ஆனால் இந்தப்போர் உலக நாட்டை மொத்தமாய் உலுக்குகின்றது.

உலகப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

உலக நன்மைக்காகவேனும் போர் நிறுத்தம் அவசியம்.

ஆனால் இரு நாடுகளின் ஈகோப்பிரச்சினை போரை நிறுத்துவதாய் தெரியவில்லை.

இதன் விளைவு உலகம் அழிவதே எனின் அதை யாராலும் மாற்றிவிட முடியாது.

7) நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா? மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா? இந்தக் கேள்விக்கான பதில் என்ன ?

மகாலட்சுமி- உரும்பிராய்

கண்டறியாத காதல் வந்தால் இப்படிப்பட்ட விசப் பரீட்சை நினைப்புகள் வருவது வழமை தான்.

அப்படிப் பார்த்தால் அமாவாசையில் மலர்கள் மலராது போலவே.

கவிஞர்கள் பொய்யர்களே. இவ்வாறு அண்டப் புழுகு ஆகாசப் புழுகு. புழுகும் கவிஞர் களைப் பிடித்து சிறையில் அடைப்பதே சிறந்தது.

8) என் காதலி நிலவைப் போன்றவள் அதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா?

துசி- வுவுனியா

இதற்கு முன்னர் தங்களின் காதலியை நான் ஒரு முறை பார்க்க வேண்டுமே.

தம்பி துசி நிலவிற்கு சொந்த ஒளி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?

அட சூரிய ஒளி நிலவில் வீழ்வதால்தான் அது நிலாவெளியாய்ப் பிரதிபலிக்கிறது.

இதை விட நிலவின் மேற்பரப்பில் ஏகப் பட்ட பள்ளத்தாக்குகள் குட்டை சொறிகள் எல்லாமே இருக்கிறன்றன.

இப்போது சொல்லுங்கள் உங்கள் காதலி நிலவைப் போன்றவளா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link