Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

காலம் தவறாமை

ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு சாலை அதிலே காந்திஜி ஒருநாள் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

குஜராத் வத்தியா பீடத்தின் நிர்வாக சபைக் கூட்டம் நடக்கப் போகிறது. அதிலே காந்திஜியும் கலந்துகொள்ள வேண்டியவர்.

அவரை அழைத்துக்கொண்டு வர, வண்டி உரிய நேரத்திலே போய்ச் சேரவில்லை!

வண்டி வரவில்லை என்று தெரிந்ததும் காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்திலே இருந்து கால் நடையாகவே புறப்பட்டு விட்டார். ஆசிரமத்துக்கும் வித்தியா பீடத்திற்கும் அதிக தூரம் சாலையிலே ஜன நடமாட்டம் இல்லை. அதனாலே வண்டி கிடைப்பதற்கும் வழி இல்லை! அதனாலே நடந்தே புறப்பட்டு விட்டார்.

கொஞ்ச தூரம் போய் இருப்பார். அப்போது ஒருவர் – கதர் உடை போட்டிருந்தவர் – சைக்கிளிலே போய்க் கொண்டிருந்தார். அவரிடம் காந்திஜி. “நான் வித்தியா பீடத்துக்குப் போக வேண்டும். கொஞ்சம் சைக்கிளைத் தருகிறீர்களா?” என்றார்.

அவர் உடனே சைக்கிளைக் கொடுத்தார்.

காந்தியடிகள் எப்பவோ தென்னாபிரிக்காவிலே இருந்து காலத்திலே சைக்கிள் ஓட்டிப் பழக்கம். இந்தியாவிலே அதற்குச் சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை! இப்போது அந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

சைக்கிளிலே ஏறி குறித்த நேரத்திற்கு அந்தக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.

முழத்துண்டு அணிந்து கொண்டு திறந்து உடம்போடு சைக்கிளிலே ஏறி காலம் தவறாமல் சரியாக நேரத்திற்கு வந்து சேர்ந்த காந்தியடிகளைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்களாம்.

காலம் தவறாமை என்பது ஒரு சிறந்த பண்பு. அது எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடாது. “என்னப்பா நேற்றைக்கு சொன்னேனே அந்தக் காரியம் என்னாச்சு?” என்றான்.

அதற்குள்ளே ஏன் அவசரப்படுகிறாய். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்!” என்று சொல்பவர்கள்தான் நம்மளிலே அதிகம்! அமெரிக்க ஜனாதிபதி வோஷிங்டனுடைய செயலாளர் ஒருவர் ஒருநாள் காலதாமதமாக வந்தாராம். அப்போது ஏன் லேட்?” என்று கேட்டிருக்கிறார்.

“என்னுடைய கைக்கடிகாரம் ரொம்ப மெதுவாக ஓடியிருக்கிறது. அதுதான் காரணம்!” என்றாராம்.

‘இதற்குப் பரிகாரம் என்ன? ஒன்று நீங்கள் உங்கள் கைக்கடிகாரத்தை மாற்ற வேண்டும் அல்லது நான் என்னுடைய செயலாளரை மாற்ற வேண்டும்!” என்றாராம் வோஷிங்டன். கான் அப்துல்பார்கான் என்ன சொல்கிறார் தெரியுமா?

“வர்தாவுலே நான் தங்கியிருந்தபோது காந்திஜி குறித்த நேரத்திலே அலுவல்களை செய்து முடித்தது என்னை ரொம்பவும் கவர்ந்தது. சாப்பிடுவது நடக்கிறது பிரார்த்தனை செய்வது தூங்குவது இது எல்லாமே அவர் குறித்த நேரத்திலே செய்து முடித்து விடுவார்!” என்கிறார்.

“நான் எங்கே போனாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு கால்மணி நேரம் முன்னாடியே போய்விடுவது வழக்கம் . அந்தப் பழக்கம்தான் என்னை மனிதனாக்கியிருக்கு” என்கிறார் நெல்சன்.

“மூன்று மணி நேரம் முன் கூட்டியே போனாலும் போகலாம் ஒரு நிமிடம் கூட பின் தங்கிவிடக் கூடாது!” என்கிறார் ஷேக்ஸ்பியர்.

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த சமயத்திலே டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?

“இன்றைக்கு இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது நாளையிலேயிருந்து நாம் செய்கின்ற தவறுகளுக்கு ஆங்கிலேயர்கள் மீது பழிபோட முடியாது!” என்கிறார். எல்லாம் சொல்லி என்ன பிரயோசனம்? இப்போதெல்லாம் ‘காலம்” சம்பந்தமாக யார் கவலைப்படுகிறார்கள் .ஒருவர் அப்படித்தான் – அவரசமாக ஆபீசுக்குப் புறப்பட்டார்.

“ஆபீசுக்கு நேரமாச்சு. சீக்கிரம் சாப்பாடு போடு!” என்றான்.

“இன்றைக்கு சமையல் கொஞ்சம் லேட் ஆகும். இப்போது பழைய சோறுதான் இருக்கு. அதனாலே நீங்கள் பக்கத்திலே உள்ள ஹோட்டலிலே டிபன் சாப்பிட்டுக் கொள்ளுங்களேன்!’ என்றார் அந்த அம்மா. இவர் கொஞ்சம் யோசித்தார். பின்பு சொன்னார்:

“சரி ஒன்று செய்கிறேன்!. முதலிலே பழைய சோறு சாப்பிடுகிறேன். அதுக்கப்புறம் ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டுத் திரும்பி வருகிறேன். அதற்குள்ளே உன் சமையல் முடிந்திருக்கும். அதை சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குப் புறப்படுகிறேன்!”என்றார். இவர்லாம் எந்தக் காலத்திலே சார் ஆபீசுக்கு வந்து சேர்வது?

தென்கச்சி. கோ. சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link