இன்று ஒரு தகவல்
Share
ஏற்றுக்கொள்ளுங்கள்
நம்மிலே சிலபேர் எப்படி என்றால், அவர்களுக்கு எதிரிலே உள்ளவர்கள் அனைவரும் எதிரியாகத் தெரிவார்கள்!
பார்ப்பதற்கு முழுப் பகையாகத் தெரியும்.
குறை எங்கேயிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? வெளியிலே இல்லை! அவர்களிடம்தான் இருக்கு!
ஏற்றுக் கொள்கின்ற சுபாவம் இல்லை என்றால் இது மாதிரி சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.
உன்னைச் சுற்றி இருக்கின்ற எல்லாமே உனக்கு வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால், உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்பதை அது காட்டுகிறது என்கிறார் ஓஷோ.
அவர் ஒரு சமயம் ஒரு கிராமத்துக்குப் போய் இருக்கிறார். அங்கே ஒரு ஓய்வு விடுதியிலே தங்கியிருந்தாராம். ரொம்ப சின்ன கிராமம். அங்கே நாய்கள் ரொம்ப அதிகம். இரவு ஆனால் எல்லா நாயும் அங்கே வந்து மரத்தடியிலே கூடிவிடும். வள் வள் என்று குரைக்க ஆரம்பித்துவிடும். அந்த ஓய்வு விடுதியிலே மந்திரி ஒருவரும் வந்து தங்கியிருக்கிறார்.
அவருக்கு அந்த நாய்கள் குரைப்பது பெரிய தொந்தரவாக போனது. தூங்க முடியவில்லை. பாதி இரவிலே எழுந்து இவரிடம் வந்திருக்கிறார்.
அந்த சமயம் இவர் அசந்து தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இவரை எழுப்பி சொன்னாராம் அவர்.
‘சுற்றிலும் இவ்வளவு சப்தங்களுக்கு இடையிலே உங்களாலே எப்படி இவ்வளவு நிம்மதியா தூங்க முடியுது?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு இவர் சொன்னார்:
அந்த நாய்கள் உங்களுக்காக கூடவில்லை.
உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காக அவைகள் இங்கே வரவில்லை. அவைகள் பத்திரிகையெல்லாம் படிப்பது இல்லை. அதனாலே ஒரு மந்திரி இங்கே வந்து தங்கியிருக்கிறது அவைகளுக்குத் தெரியாது. அவைகளுக்கும் உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அது எல்லாம் அது அது வேலையை செய்து கொண்டிருக்கிறது! நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள்?” என்றார்.
“அது எல்லாம் குரைத்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தால் நான் எப்படி துன்பப்படாமல் இருக்க முடியும்?” என்றார் அவர். இவர் அதற்கு விளக்கம் கொடுத்தார்.
நீங்கள் அவைகள் குரைப்பதை எதிர்த்துப் போராடாதீர்கள். நீங்கள் அதோடு போராடுகிறீர்கள். அதுதான் பிரச்சினையை உண்டாக்குது. பிரச்சினையை உருவாக்குவது அவைகளின் சத்தம் இல்லை. உங்களுடைய போராட்டம்தான் – அந்த சத்தம் உங்களை தொந்தரவு செய்யவில்லை. அந்த தொந்தரவு உங்களை சத்தத்தினாலே நீங்களே அந்த சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். நீங்களாவே உங்களுக்குள்ளே ஒரு நிபந்தனையை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் நான் தூங்க முடியும் என்ற நிபந்தனையை நீங்களே உங்களுக்கு விதித்துக் கொள்கிறீர்கள்.
உங்கள் நிபந்தனையை நாய்கள் கவனிக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் நிபந்தனை நிறைவேறினால்தான் தூங்க முடியும் என்று நினைக்கிறீர்கள். அதனாலே உங்கள் நிபந்தனைதான் உங்களைத் தொந்தரவு செய்யுது. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நாய்கள் குரைப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவைகள் சத்தத்தை நிறுத்தினால்தான் தூங்குவேன் என்ற நிபந்தனையை விலக்குங்கள்!
நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நமக்குத் தகுந்த மாதிரி நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் பாருங்கள் அது முடியாத காரியம்.
எது எப்படி இருக்குமோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்க வேண்டும். ஒருவர் வந்தார்.
“சார் எங்க வீட்டிலே தினம் பயங்கரமாக குறட்டை சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இருந்தாலும் அது எனக்குத் தொந்தரவாகத் தெரியாது. தினமும் கேட்டுப் பழகிப் போச்சு” என்றார்.
“குறட்டை விடுவது யார்? உங்கள் மனைவியா?” என்று கேட்டேன். “இல்லைங்க. நான்தான் அது!” என்று சொல்லிவிட்டு அசட்டுத்தனமாக சிரிக்கிறார்!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்


