Type to search

Articles அபிமன்யு கட்டுரைகள்

இந்திய துணைஜனாதிபதியின் கூற்றும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும்

Share

ஒற்றுமையீனம் தொடர்பில் ஒரு சிறிய கதை, மூன்று பாத்திரங்களில் கொஞ்ச நண்டுகள் உயிருடன் விடப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பாத்திரங்களின் வாய்ப்பகுதி மூடப்பட்டிருந்தது. மூன்றாவது பாத்திரத்தின் வாய்ப்பகுதி மட்டும் மூடப்படவில்லை.

ஆயினும் அந்தப் பாத்திரத்திலிருந்த எந்த நண்டுகளும் வெளியே வரவில்லை. இதைக் கண்ட ஒரு நபர் கேட்கிறார். ஏன் முதல் இரண்டு பாத்திரங்களும் மூடிப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பாத்திரம் மட்டும் மூடப்படவில்லை என.

அதற்கு மற்றவர் கூறுகிறார். முதலாவது ஆபிரிக்க நண்டுகள் அவை ஒற்றுமையானவை. திறந்துவிட்டால் வெளியே சென்றுவிடும். இரண்டாவது ஐரோப்பிய நண்டுகள் அவையும் ஒன்று பட்டவை. திறந்துவிட்டால் வெளியே வந்துவிடும் என்றார்.

அப்படியென்றால் மூன்றாவது பாத்திரத்தில் இருப்பது எந்த நாட்டு நண்டுகள் என அவர் ஆர்வத்தோடு கேட்கிறார். அதற்கு மற்றவர் கூறுகிறார், அது ஈழத்தமிழ் நண்டுகள். அவற்றை மூடிபோட்டு மூடத் தேவையில்லை. ஒரு நண்டு வெளியே வர முற்பட்டால் கீழே உள்ள மற்றைய நண்டுகள் விடாது. பிடித்து கீழே வீழ்த்திவிடும்.

இவ்வாறு ஒரு நண்டுகூட வெளியே வராது. அந்தளவிற்கு அவைகள் ஒன்றையொன்று குழிபறித்து வீழ்த்திக் கொண்டே இருக்கும்.

ஆதலால் அவற்றிற்கு மூடியும் தேவையில்லை. அவை வெளியே சென்றுவிடும் என்ற பயமும் தேவையில்லை என்றார்.

இது ஒரு புனைக் கதையாக இருந்தாலும் எம் ஈழத்தமிழினத்தின் ஒற்றுமை தொடர்பான எண்ணப்பாட்டை குறிப்பதாய் அமைந்திருக்கின்றது.

ஒற்றுமையீனம், காட்டிக் கொடுப்பு, துரோகம் என்பன இன்று – நேற்று மனிதரிடத்தே

தோன்றியதல்ல. அது இதிகாசப் புராணங்களிலும் இருந்தன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆம், ஈழத்தமிழினம் ஒருகாலத்தில் ஒற்றுமைப்பட்டு ஒரே குடையின்கீழ் நின்றது என்பது உண்மை.அது பொற்காலம். இப்போது பொறி வைக்கும் காலம் என்றாகி விட்டது.

ஈழத் தமிழினம் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசிய

அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏனெனில் ஈழத்தமிழினத்தின் இன்றைய நிலைக்கு எம் தமிழ்த் தேசிய

அரசியல்வாதிகளின் பதவி ஆசையே மூலகாரணம் என்பதை இவ்விடத்தில் பதிவிட வேண்டியது காலத்தின் தேவை.

ஆம், அண்மையில் இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி இராதா கிருஸ்ணன் இலங்கைக்கு விஜயம் செய்து, வடக்குக் கிழக்கிற்கு விசேட விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன் அவர் தமிழ்த் தேசியத் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டியது மிக மிக முக்கியம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் கைகளைப் பற்றியபடி கூறியிருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் தமிழரசுக் கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் நிலையில், இந்திய உப ஜனாதிபதியின் கூற்றை தமிழரசுக் கட்சியின்

தலைமை எவ்வாறு நோக்கும் என்பது புரியாத புதிர்.

ஆம், தமிழினத்தின் ஒப்பற்ற ஒற்றுமையின் சின்னமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்த பெருமை தமிழரசுக் கட்சியையே சாரும்.

இவ்வாறான நிலையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் பெரும் பூதாகரமாகியிருக்கின்றமையினையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டி

யேயாக வேண்டும்.

நிலை இவ்வாறு இருக்கையில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்

சி.வி.கே சிவஞானம் அண்மையில் அறிக்கை யொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறும் சண்டை சச்சரவுகளைப் பொதுவெளியில் பேச வேண்டாம் என இந்தப் புதுவருடத்தில் கட்சி உறுப்பினர்கள் திடசங்கற்பம்

எடுக்க வேண்டும் என்றவாறு கருத்துரைத் திருக்கின்றார்.

தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்களை இல்லாதொழித்து தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் கட்சியாக தமிழரசுக் கட்சி திகழ வேண்டும். அதற்காக இந்தப் புத்தாண்டில் திடசங்கற்பம் பூணுவோம் என்று கூறவேண்டிய அவர், உட்கட்சிப் பூசல்களைப் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கூறியிருப்பது வேடிக்கைக்குரியது.

இங்குதான் நாம் மீண்டும் ஒற்றுமைப்படுத்தல் என்ற சிந்தனையை மேலோங்கச் செய்ய வேண்டும்.இதற்கு அண்மையில் உடுவில் பகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடர்பாடல் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனின் உரை சான்று பகிர்கின்றது.

நாம் தமிழ் மக்களை இன்னும் நெருங்கிச் செல்ல வேண்டும். தமிழ் மக்களின் நாடித் துடிப்பை அறிய வேண்டிய தேவைப்பாடு எமக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் நாடித் துடிப்பு; ஒற்றுமைப்படுத்தல் – ஒன்றுபடுதல் – கூட்டுச் சேருதல் – கூட்டணியாகுதல் – கூட்டமைப்பாக மீண்டும் மலர்தல் என்றவாறே இருக்கின்றது.

இதைத் தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் இன்றைய இளம் சமூகம் பழையன கழிதலையும் புதியன புகுதலையும் விரும்புகின்றது.நாம் மீண்டும் மீண்டும் அதே பழைய புராணத்தைப் பாடிக்கொண்டிருப்போமானால், அதை எம் இளம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது.

ஈழத்தமிழினத்தின் விடுதலை சார்ந்து, அவர்களின் இன்னல்களைத் துடைக்க எம் செயற்றிட்டம் என்ன என்பதை எம் இளம் தலைமுறையினரிடம் விதைக்க வேண்டிய தேவை எமக்குண்டு.

இதற்கு நாம் புதிய தலைமுறையினரின் விருப்பமான வழியை அறிந்து, அவ்வழியினூடே அதைத் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானது.

இல்லையேல் எமது அடுத்த சந்ததி தமிழ்த் தேசிய அரங்கிலிருந்து பிரி க்கப்பட்டவர்களாக மாற்றமடைவது சர்வநிச்சயம்.

அபிமன்யு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link