ஆலடி மாநாடு
Share
திருவள்ளுவர் கலாசார மையத்தை யாரிடம் ஒப்படைப்பது உகந்ததது
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனை வரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.
இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். நாளை மே-18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக் கூற, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.
மெளன அஞ்சலியோடு ஆலடி நிசப்தமாகியது.அந்த நிசப்தம் தமிழின அழிப்பின் கொடூரத்தை – வலியை மீட்பதாய் இருந்தது.
அந்த சோகத்தினூடு வாத்தியார் வைத்திலிங்கம் எழுந்தார்.ஓ! எம் உறவுகளே! பேரினவாதப் பேய்களின் நிட்டூரத்திற்கு ஆளாகி உயிர் நீத்த உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
நீங்கள் மீளவும் உயிர்த்து விடாதீர்கள்.ஏனெனில் உங்களை மறந்து பித்தலாட்டம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளின் நடிப்புக்கண்டு உங்களால் ஒருபோதும் தாங்க முடியாது.
ஆகையால் நீங்கள் நிம்மதியாக நீள் துயில் கொள்ளுங்கள்.உங்கள் ஆத்மா பேரின்பப் பெரு வாழ்வு பெறட்டும்.
நாம் செய்த பாவத்திற்கு எல்லாத் துன்பங்களையும் அனுபவித்து நிற்கின்றோம்.ஆம், எங்கள் இனிய உறவுகளே! நாங்கள் தமிழர்கள். எங்களை இந்த உலகம் ஒரு போதும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை.
அந்த அளவுக்கு எங்களிடம் வல்லமையும் இல்லை.
எங்கள் இனத்தின் பெரும் சாபக்கேடு எங்கள் தமிழ் அரசியலே. அந்தச் சாபக் கேட்டினின்றும் நாம் தப்பிப்பிழைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
போதாக்குறைக்கு எங்கள் ஈழத் தமிழ் இனத்தின் அரசியலை ஒரு சில புலம் பெயர் தமிழர் அமைப்புகள் தீர்மானிக்கவும் உயிர்ப்புக் கொடுக்கவும் கங்கணம் கட்டி நிற் கின்றன.
விடுதலை புலிகளின் பணத்தில் சுகசீவியம் நடத்துகின்றவர்கள், புலிகளின் காசுக்குக் கணக்குக் காட்டு வதைத் தவிர்க்கும் பொருட்டு தாயக அரசியலில் தலையிட்டு, தமிழரின் தலையில் மண்ணைக் கொட்ட முடிவு செய்துவிட்டனர்.
இந்த நிலையில் புதியதும் நேர்மையானதுமான ஒரு தமிழ் அரசியல் தலைமை நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அறவே இழந்து போயிற்றுது.
இனி இயற்கை இரக்கம் காட்டினாலன்றி எங்கள் தமிழினம் உரிமை பெற்று நிம்மதியாக வாழ்வதற்கு வேறு எந்த வழியுமில்லை.
ஆகையால் நீங்கள் நிம்மதியாக நீள்துயில் கொள்ளுங்கள். நீங்கள் பட்ட அவலம் – துயரம்- வேதனை நிச்சயம் கொடியவர்களை வதைக்கும்.இது இறைவனின் தீர்ப்பு.
ஆக, உங்கள் ஆத்மா பேரின்பப் பெருவாழ்வு பெற, இறைவன் திருவடியை வழுத்தி தொழுகின்றோம்.
விக்கித்தவித்த குரலோடு வாத்தியார் வைத்திலிங்கத்தின் முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் உரை அமைதியடைய, ஆலடி அப்படியே நிசப்தமாகியது.
நீண்டு செல்லும் நிசப்தத்தைக் கலைக்க விதானையார் விசுவலிங்கம் குரல் கொடுத்தார்.
விதானையார்:- இந்திய மத்திய அரசினால் அமைக்கப் பெற்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை தங்களிட்ட ஒப்படைக்க வேணும் எண்டொரு தீர்மானத்தை யாழ்ப்பாண மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாம்.
கங்காணி:- இதைத் தான் சொல்லுறது. கட்டியிருந்த பூனையை அவிட்டுவிட்டிட்டு பூஸ்… பூஸ்… என்று கூப்பிடுவது எண்டு..
மூப்பர்:- என்ன கங்காணியார் சொல்லுறியள்.
கங்காணி:- மூப்பர் அண்ணே! யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை இந்திய மத்திய அரசு அமைத்ததும் அதனைப் பொறுப்பேற்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையிட்டத்தான் கேட் டது.
அதற்கு இந்தப் பெரிய மண்டபத்தை நிர்வகிப்பதற்குத் தங்களிட்ட போதிய நிதிப்பலம் இல்லை எண்டு யாழ்.மாநகர சபை சொல்லிப் போட்டுது.
இதால தான் திருவள்ளுவர் கலாசார மையத்தை யாரிட்ட ஒப்படைக்கிறது எண்ட கேள்வி எழுந்தது.
இந்த நிலையில இப்ப கலாசார மையத்தைத் தங்களிட்ட ஒப்படைக்க வேணும் எண்டு யாழ்.மாநகர சபை தீர்மானம் எடுத்திருக்குது.
விதானையார்:- என்னைப் பொறுத்த வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை நிர்வகிப்பதற்கு ஒரு தனியான நிர்வாகம் அமைக்கப் பட வேணும்.
அதில யாழ்ப்பாணம், இந்தியத் துணைத் தூதரகத்தின்ர பிரதிநிதித்துவமும் இருக்க வேணும்.
சிறாப்பர்:- ஏன் விதானையார் அப்படிச் சொல்லுறியள்.
திருவள்ளுவர் கலாசார மையத்தை எங்கட யாழ்ப்பாண மாநகர சபை பொறுப்பேற்றால் நல்லது தானே.
விதானையார்:- இஞ்சே சிறாப்பர் நாங்கள் எதையும் தூர நோக்கத்தோட பார்க்க வேணும்.இப்ப இருக்கிற யாழ்.மாநகரசபை நிர்வாகமே, காலா காலமாக இருக்கு மெண்டு நினைக்கக்கூடாது.
இந்தாப்பாருங்க யாழ்.பல்கலைக்கழக பேரவையில முன்பு ஒரு சிங்கள பிரதிநிதி தான் இருந்தார். இப்ப மூன்று பேர் இருக்கினம்.
இது போல எதிர்காலத்தில யாழ். மாநகர சபையின்ர ஆட்சியை தென்னிலங்கை அரசியல் கட்சியும் கைப்பற்றலாம்.
ஆகையால இப்ப இருக்கிற நிலைமையை வைத்துக் கொண்டு தீர்மானங்களை எடுக்கக் கூடாது.
வாத்தியார்:- விதானையார் சொல்லுறதை நானும் அங்கீகரிக்கிறன்.
யாழ்.மாநகரசபையைப் பொறுத்தவரை அதுவும் ஓர் அரசியல் பின்னணி கொண்டது தான்.
ஒருமுறை யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில தமிழ் மக்கள் பேரவை கூட்ட மொன்றை நடத்துவதற்கு, அப்போது யாழ். மாநகர சபையின் ஆணையாளராக இருந்தவர் அனுமதி தரவில்லை.
முன்பிருந்த ஆணையாளர் ஒருவரின் ஆலோசனைப்படி தான் அந்த ஆணையாளர் பொது நூலக கேட்போர் கூடத்தை தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு வழங்க வில்லை என்று பரவலாகக் கதைக்கப்பட்டது.
ஆகையால திருவள்ளுவர் கலாசார மையத்தை யாழ்ப்பாண மாநகர சபையிட்ட ஒப்படைக்கக்கூடாது.
மாறாக, அதை நிர்வகிப்பதற்கு ஒரு சரியான குழுவை யாழ்ப்பாணத்தில அமைக்க வேணும்.
அதிலும் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின்ர பிரதிநிதித்து வமும் இருப்பது அவசியம்.
அப்பதான் திருவள்ளுவர் கலாசார மையம் எங்கட தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுவதாக இருக்கும்.
இவ்வாறு வாத் தியார் கூற, அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளை யார் கோவில் கண் டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்த வர்கள் எழுந்து கோயி லுக்குச் சென்றனர்.


