தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 27
இந்து சமயக் கொள்கைகளுடன் இணைந்து செல்லக்கூடிய பெளத்தமும் நம் சைவமும் முட்டி மோதிக் கொள்வதன் சூக்குமம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
பெளத்த விகாரைகளில் இந்துக் கடவுள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாறான நிலையில் தமிழர்களில் பெளத்தர்கள் இல்லாத வெற்றிடமும் சிங்களவர்களில் சைவர்கள் இல்லாத இடைவெளியும் சைவம்-பெளத்தம் என்ற ஒன்றிணைந்த சமயங்களை அந்நியப்படுத்தி, பெளத்தம் என்றால் அது எங்களின் பகைச் சமயம் என்றாகிவிட்டது.
இங்கு பெளத்தம் சைவர்களின் பகைச் சமயம் என்றுரைக்கும் போது, அதன் மறுதலை சைவம் பெளத்தர்களின் பகைச் சமயம் என்பதாகவே கூறவேண்டும்.
ஆம். அவ்விதம் கூறுவதற்கு நம் மனம் ஏவவில்லை, ஏனெனில் பெளத்தர்கள் சைவாலயத்தில் வழிபாடற்றுகின்றனர். கதிர்காமத்துக் கந்தனுக்குப் பூசை செய்கின்றனர்.
ஆனால் சைவர்கள் பெளத்த விகாரைகளுக்குச் சென்று வழிபாடாற்றுவது பற்றிய தகவல்கள் இன்னமும் இல்லை.
இதையும் கடந்து, சைவாலயங்களில் கெளதம புத்தபிராணை வைத்து வழிபாடு செய்வதான நடைமுறைகளும் இல்லை.
நிலைமை இதுவாக இருக்கும் போது, பெளத்த சிங்களவர்கள் சைவ சமயத்தை தமது பகைச் சமயமாகக் கருதுகிறார்கள் எனக் கூறுவதற்கான போதிய சான்றுகள் இல்லை என்றே கூற வேண்டும்.
இதைவிட, கெளதம புத்தபிரான் பரிநிர்வாண முத்தியடைந்த போதி மரம் என்பது அரசமரத்தைக் குறிப்பதாகும். அரசமரம் பெளத்தர்களின் வழிபாட்டுக்குரியது மட்டு மல்ல. அஃது இந்துக்களினதும் வழிபடு தரு.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அரச இலையில் அவதரித்தார் என்கிறது புராணம். இது தவிர, எங்கள் ஈழத்தமிழர்களின் ஆதிகால வழிபாட்டில் அரச மரம் முதன்மைக்குரியது.
அதனாலேயே அரசனை நம்பி புருசனைக் கைவிடாதே எனத் தமிழ்ப் பழமொழி கூறலாயிற்று. இங்கு அரசன் என்பது அரச மரத்தைக் குறிப்பதாகும்.
அதாவது பழந்தமிழ் பண்பாட்டில், குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வலம் வந்து வழிபாடு செய்தால், தாய்மை அடையும் பேறு கிடைக்குமென கருதப்பட்டது.
ஆக, அரச மரத்தை எங்கள் வழிபடு தருவாக நாம் போற்றி வந்துள்ளோம் என்பது இங்கு உறுதியாகிறது. ஆயினும் சமகாலத்தில் அரச மரம் எங்கிருந்தாலும் அதில் புத்தர் சிலையை வைக்கின்ற பெளத்த ஆக்கிரமிப்புக் காரணமாக அரச மரத்தை தறித்து விடுவது தான் ஓரே வழியயன்ற நிலைக்கு சைவ மக்கள் வந்து விட்டார்கள் என்பது வேதனை மிகுந்த உண்மைச் செய்தியாகும்.
பெளத்தமும் சைவமும் ஒற்றுமைப்பட்டிருந்த காலம்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக பெளத்தமும் சைவமும் மிகுந்த ஒற்றுமையோடு இருந்துள்ள தென்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
சைவப் பெருவள்ளல் சேர்.பொன்.இராமநாதன் பிரபு, பெளத்த சிங்களவர்களை முழுமையாக நம்பினார். பெளத்தமும் சைவமும் ஒன்றென அவர் கருதியதால், பெளத்த சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என முடிவு செய்தார்.
அதன் காரணமாகவே தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை பற்றி அவர் தனித்துச் சிந்திக்கவில்லை. ஆம், நாடு சுதந்திரமடைந்த போது நாட்டின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேன நாயக்கா தனித்து சிங்களவர்கள் பற்றிச் சிந்தித்த போது தான், அழகிய இலங்காபுரியில் இனவாதமும் மதவாதமும் தலை விரித்தாடத் தலைப்பட்டது எனலாம்.
இதை நாம் கூறும் போது, டி.எஸ்.சேன நாயக்கா தனித்து பெளத்த சிங்களம் பற்றிச் சிந்தித்ததோடு, இலங்கை பெளத்த சிங்கள நாடாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அவர் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தார்.
அதே சமநேரத்தில் பெளத்தர்களும் சைவத் தமிழர்களும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் அந்நியராட்சியில் உள்நுழைந்த பிற சமயத்தவர்கள் கருதினர் என்பதும் இதில் தந்தை செல்வ நாயகம் போன்றவர்களின் வகிபங்கும் உண்டென்பதும் மறுதலிக்க முடியாத உண்மை.
தொடரும்..


