Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 18

இலங்கைத் திருநாட்டை சிவபூமி எனத் திருமூலர் போற்றித் துதிசெய்தார்.

இலங்கை வேந்தனாக இருந்த இராவணேஸ்வரன் மிகச்சிறந்த சிவபக்தன்.

அவனின் திருமேனியில் இருந்த திருநீற்றை விதந்துரைத்த திருஞானசம்பந்தர் “…இராவணன் மேலது நீறு…” என்றார்.

ஆக, இதிலிருந்து இந்த நாட்டின் ஆதிக்குடி சைவத் தமிழ் என்பது உறுதியாகிறது.

இதனை இன்னும் ஆதாரப்படுத்துவதாக இந்த நாட்டின்கண் அமையப் பெற்ற பஞ்ச ஈச்வரங்கள் அமைகின்றன.

ஆம், திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனால் அமைக்கப்பெற்றது.

அன்னியராட்சியில் கோணேஸ்வரர் கோயில் அழிக்கப்பட்டமை அன்னியர்கள் எமக்கு இழைத்த பெரும்பாதகச் செயலாகும்.

இயற்கை வனப்பும் நித்தமும் அலை ஓசை எழுப்புகின்ற கடலும் சூழ்ந்த கோணமாமலையானது, இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தமிழர் என்பதற்கான தொல்லியல் சான்றாதாரமாகும்.

எனினும் திருக்கோணேஸ்வரத்தை எப்படியும் ஆக்கிரமித்து, அதனைப் பெளத்தர்களின் இடமாகக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உண்மை. திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு என இலண்டனில் இருந்து தரு விக்கப்பட்ட காண்டாமணியை இன்னமும் மணிக் கோபுரத்தில் எழுப்பி கோணேஸ்வரப் பெருமானின் மணியோசை திருக்கோணேஸ்வரம் முழுமையிலும் ஒலிப்பதற்கு முடியாமல் உள்ளது.

உண்மை. திருக்கோணேச்சர ஆலயத்தில் புதிய காண்டாமணியை ஏற்று வதற்கான மணிக்கோபுரத்தை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தடை விதித்துள்ளது எனில், எங்கள் சைவ சமயத்திற்கு இந்த நாட்டில் இருக்கக் கூடிய இன்னல்கள் எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆக, வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தை மழுங்கடித்து அதனை அப்படியே அமிழ்த்துகின்ற ஈனச் செயலில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டிருக்கின்றது.

எனினும் இது பற்றி எங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பாராளுமன்றத்தில் பேசவில்லை என்பது தான் விசித்திரமான உண்மை.

ஆம், திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கென லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட காண்டாமணியை இன்னமும் ஏற்ற முடியாமல், தொல்லியல் திணைக்களம் தடுத்து வைப்பது ஏன்?

இந்த நாட்டின் தொல்லியல் திணைக்களம் என்பது தனித்து சிங்களவர்களுக் கானதா? என தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யாராவது கேட்டிருந்தால், மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் ஆலயத்தில் அந்தக் காண்டாமணி ஒலித்திருக்கும்.

எனினும் இது குறித்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பேசாமல் மெளனமாக இருக்கிறார்கள் எனின், அதற்குக் காரணமும் உண்டு.

ஆம், சிங்களவர்களை – பெளத்தத்தை எதிர்ப்பதில் நம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னிற்பவர்கள் அல்ல. அப்படிப் பின்னிற்பவர்களாயின், அவர்கள் தையிட்டி விகாரை விடயத்திலும் மெளனமாகவே இருந்திருப்பர்.

ஆனால் தையிட்டி விகாரை தொடர்பில் வெளிக் காட்டப்படும் எதிர்ப்பு எத்தகையது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அப்படியானால், திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் காண்டாமணி தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய்திறக்காமல் இருப்பதற்கு மூல காரணம்;

தாங்கள் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்காகக் குரல் கொடுத்தால், தங்களை இந்துத்துவவாதிகளாக கத்தோலிக்கத் தமிழ் மக்கள் கருதி, தங்களுக்கு வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள் என்ற பயமேயன்றி, மற்றும்படி அவர்களின் மெளனோற்சவத்திற்கு வேறு காரணம் ஏதுமில்லை.

ஆம், இதை நாம் கூறும் போது, பெளத்த விகாரைகள் தொடர்பில் எதிர்க்கின்ற நம்மவர்கள் திருக்கோணேஸ்வரத்தில் நடக்கின்ற ஆக்கிரமிப்பை – தொல்லியல் திணைக்களத்தின் தொல்லைகளை என்றாவது எதிர்த்தார்களா?அல்லது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஒன்றிணைந்து திருக்கோணேஸ்வரத்தில் உண் ணாவிரதமிருந்து தங்களின் எதிர்ப்பைக் காட்டினார்களா என்றால் எதுவு மில்லை.

இந்த நிலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை இந்திய மத்திய அரசு புனரமைத்துத் தரவேண்டுமென்ற கோரிக்கையை சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு.திருமுருகன் முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கையானது கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அவரால் கையளிக்கப்பட்டது.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link