இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும்
Share
முல்லைத்தீவில் குருந் தூர்மலை, வவுனியாவில் வெடுக்குநாறி, திருகோணமலையில் திருக்கோணேஸ்வரமும் கன்னியா வெந்நீரூற்றும் என சைவ சமயத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆக்கிரமித்து அங்கு பெளத்த விகாரைகளை அமைப்பது பெளத்த பீடங்களின் இலக்காக இருக்க, அவர்களின் பெளத்த மதவாதத்திற்கு தொல்லியல் திணைக்களம் துணை போவது பற்றி கடந்த தரிசனத்தில் கண்டோம்.
தவிர, இந்து மதக் கோட்பாடுகளின் பின்னணியைக் கொண்ட பெளத்தர்கள் சைவாலய தரிசனத்தை ஒருபோதும் தவிர்ப்பதில்லை.
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகின்ற பெளத்த சிங்கள மக்கள் நல்லூர்க் கந்தசுவாமியார் ஆலயத்தையும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தையும் தரிசிப்பதைத் தங்களின் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
அதிலும் இந்த நாட்டின் ஆட்சித் தலைவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது, நல்லூர்க் கந்தனிடம் சென்று வழிபாடு செய்வதை ஒரு போதும் தவிர்த்ததில்லை.
இங்கு தான் ஒரு விடயத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் செல்வதாக இருந்தால், ஆண்கள் மேலாடை களைந்து செல்வது கட்டாயமானது.
இந்த நிபந்தனை மகோற்சவ காலத்தில் அங்கு கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பொதுவானது.
அந்த வகையில் நல்லூர் முருகன் ஆலயத்தை வழிபட வருகை தந்த முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ ,மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது சேட்டைக் கழற்றி நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடாற்றினர்.
ஆம், இந்த நாட்டின் ஆட்சித் தலைவர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்களின் ஆட்சித் தலைவனாகிய நல்லூர் முருகனி டம் வருவதாக இருந்தால், அங்கு இருக்கக்கூடிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு நிறைவேற்றினால் மட்டுமே நம் தமிழ்த் தலைவன் நல்லூர் முருகனைச் சந்திக்க முடியும்.
ஒருமுறை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒரே ஒரு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்பது இங்கு குறித்துரைக்கப்பட வேண்டும்.
இங்ஙனம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நல்லூர்க் கந்தசுவாமியாரின் கோயிலுக்குச் செல்வதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், வட இந்தியாவில் ஆலயப் பிரவேசத்தின் போது ஆண்கள் மேலாடை களைவது மரபன்று. இதன் காரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது மேலாடையைக் களைந்து செல்வது பொருத்தமற்றதாகவும் பாதுகாப்பிற்கும் அது ஏற்புடையதற்றதாகவும் கருதப்பட்டது.
எனினும் ஆண்கள் மேலாடையுடன் நல்லூர் முருகனிடம் செல்ல முடியாது என்ற நிபந்தனை இந்தியப் பிரதமருக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில், நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் செல்கின்ற நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டு பிரதமர் மோடி கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அங்கு வழிபடுகின்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
இத் தருணத்தில், மகாத்மா காந்தியடிகள் கீரிமலை நகுலேஸ்வரத்திற்கு வந்தமை குறித்தும் காந்தியடிகளின் அஸ்தியில் ஒரு பகுதி கீரி மலைக் கடலில் கரைக்கப்பட்டது என்ற தகவலும் பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறப்பட்ட போது, அவர் அதிசயித்து நின்றதான தகவல்களும் உண்டு.
இங்கு நாம் கூறவருவது இந்துத்துவத்தில் – இந்து சமய வழிபாட்டில் மிகவும் உறுதியாக இருக்கக் கூடிய பிரதமர் மோடி தனது மேலாடையைக் களைந்து நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் செல்லாத போது, இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த ராஜபக் , மைத்திரிபால சிறிசேன , ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது மேலாடை களைந்து நல்லூர்க் கந்தப்பெருமானை கண்டு தரிசித்தனர் என்றால், எங்கள் ஈழத்து சைவத் தமிழ்ப் பண்பாட்டுடன் இணைந்து போவதில் சிங்களத் தலைவர்கள் எவருக்கும் எந்த இடைஞ்சலும் இருக்கவில்லை என்பது உறுதியாகிறது.
இது தவிர, தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு வருகின்ற பெளத்த சிங்கள மக்கள், நல்லூர் முருகனைத் தரிசிப்பதற்காகச் செல்கின்ற அந்த ஒழுங்கைப் பார்க்கும் போது நம் சைவசமயத்தவர் கூட அப்படி இல்லை என்று எண்ணுமளவில் அத்துணை பயபக்தி அவர்களிடம் மேலோங்கி நிற்கும்.
உண்மை. அர்ச்சனைப் பொருட்களை தோளுக்கு மேல் ஏந்திய வண்ணம் அவர்கள் நல்லூர் முருகனின் கோபுர வாசலைத் தாண்டி உள்நுழையும் போது, அவர்களிடம் இருக்கக் கூடிய பக்தியின் உச்சத்தை- சைவ சமயம் மீது அவர்கள் கொண்டுள்ள அளவு கடந்த மதிப்பை நினைக்குங்கால் ஏன்தான் இப்படியாயிற்று. நாமும் பெளத்தமும் மோத வேண்டிய தேவை எதற்கானது என்ற சிந்தனை சிரசைத் தொட்டுக் கொள்ளும்.
தொடரும்…


