கண்ணீரும் கம்பலையுமாக வாழும் தமிழ்ப் பெண்களின் அவலம் பாரீரோ!
Share
இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம்.
உலகு வாழ் பெண்களின் உரிமை தொடர்பில் ஓங்கி குரல் எழுப்புவதற்காக உலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள்.
பொதுவில் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற நாடுகளும் சமயங்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன.
அதேவேளை ஒரு காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் இப்போது எவ்வளவோ அறுபட்டு சாதனை படைக்கும் வீரப்பெண்கள் பாரெங்கும் உள்ளனர் என்ற உண்மையையும் நாம் இங்கு கூறித்தானாக வேண்டும்.
பெண்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்த தமிழ்ப்புலவன் பாரதியால் தமிழ் இனம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச்செருக்கு இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்ற பாரதியின் பாவரிகள் வீட்டுக்குள் பூட்டிக்கிடந்த பெண்களை விழித்தெழ வைத்தது.
அதேநேரம் பெண்களைத் தாயாகவும் தாம் பிறந்த மண்ணை தாய் மண்ணாகவும் பேசுகின்ற மொழியைத் தாய்மொழியாகவும் கங்கையை பெண்ணாகவும் ஏற்றிப்போற்றிய தமிழ் இனம், பெண்களின் உரிமையை நிலை நாட்டுவதில் கணிசமாகப் பங்காற்றியது என்பதையும் இங்கு நாம் கூறித்தானாக வேண்டும்.
தாய் எனும் அன்பின் அடையாளத்தை கருணையின் வடிவத்தை போற்றி வந்த நம் தமிழ் இனத்தில், பாசத்தின் தவிப்பால் கண்ணீரும் கம்பலையுமாக வாழுகின்ற எங்கள் தமிழ்ப் பெண்களின் அவலத்தை இன்று வரை சர்வதேசம் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.
ஆம், கொடும்போரில் பெற்ற பிள்ளையை, கட்டிய கணவனை, உடன்பிறந்த சகோதரனை இழந்து தவிக்கின்ற பெண்கள் ஒருபுறம்.
காணாமல்போன தங்கள் பிள்ளைகளைத் தேடி அலைகின்ற தாய்மார் இன்னொரு புறமுமாக எம் தமிழ்த் தாய்மார் விடுகின்ற கண்ணீர் கொஞ்சமா என்ன?
தன் பிள்ளைப்பாசத்தால் ஊன் உருகி உள்ளம் நொந்து கண்ணீர் சொரிந்து காலமெல்லாம் காத்திருந்த தாய், தன் பிள்ளை மீண்டு வராததால் காலன் வசமான கதைகள் எத்தனை.
இருந்தும் இன்னமும் அந்தப் பெண்களின் அவலத்தை உலகம் கண்டு கொள்ளவில்லை எனும்போது சர்வதேச மகளிர் தினம் வெறும் சடங்கா? சம்பிரதாயமா? என்பதுதான் புரியாமல் உள்ளது.
உண்மை. இன்றுவரை கண்ணீருடன் வாழுகின்ற தமிழ்ப் பெண்களுக்கு என்று நீதி கிடைக்கிறதோ! என்று நியாயம் வழங்கப்படுகிறதோ! அன்றுதான் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் அர்த்தமுடையதாக அமையும்.
அதுவரைக்கும் எல்லாம் பண்டாரவெடிகளேயன்றி வேறில்லை.