விடுதலைப் புலிகள் காலத்து தங்கம் தேடி அகழ்வுப்பணி
Share
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரைக் கைது செய்து மேற்கொண்ட விசார ணைகளின் அடிப்படையில் குறித்த தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் குறித்த பகுதியில் தங்கம் உட்பட பல பொருட்கள் புதைத்து வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் புதையல் தேடும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றுக் காலை முதல் முன்னெடுக்கப்பட்ட தங்கம் தேடும் பணிகளின்போது எவையும் மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.