மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைப் பெண் முதலாவது தொற்றாளர் அல்ல
Share
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார், எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இனங்காணப்படும் நோயாளர்களில் வைரஸின் செயற்பாடுகள் தீவிரமாகக் காணப்படுகின்றமையால் தொற்று பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
இந்த கொத்தணி பரவலால் கொழும்பு மாவட்டத்திற்கு நேரடி தொடர்பு இல்லை என்ற போதிலும் ஆடை தொழிற்சாலையுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய அலுவலகம் கொள்ளுப்பிட்டியில் உள்ளதால் தீவிர கண்ணகாணிப்பில் உள்ளது.
கேள்வி: இந்தியாவிலிருந்து குறித்த ஆடை தொழி ற்சாலைக்கு வந்த இருவரால் தான்
தொற்று ஏற்பட்டது என்று கூறப்படுகிறதே?
பதில்: எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முதலாவதாக இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
காரணம் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து குறித்த ஆடை தொழிற்சாலையில் பெரும்பாலனவர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இந்த பெண்ணுக்கு செப்டெம்பர் 28 ஆம் திகதியே சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
எனவே இவர் முதலாவது தொற்றாளர் அல்ல. இவருக்கு முன்னர் தொற்று ஏற்பட்டவர்கள் அங்கு இருந்துள்ளார்கள்.
800 பேரில் முதலாவது தொற்றாளர் யார் என்று இனங்காண்பது கடினமாகும். இந்நிலையில் முதலாவது தொற்றாளரையும் தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு எவ் வாறு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மினுவாங்கொடை – ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிபவர்கள் சிலர் விடுமுறை யில் சென்றுள்ளனர். அவர்களில் அம்பாந்தோட்டை, பதுளை, காலி, குருநாகல், மொனராகலை, புத்தளம், கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலநறுவை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ளோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
எனினும் இது குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. ஆரம்பத்தைப் போன்று அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும்.
வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முதலாவதாக இனங்காணப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆரம்ப கட்டத்திலேயே பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமையால் அவர்களிடம் வைரஸ் தன்மை வெளிப்படாமல் இருக்கலாம். அதனாலேயே அவர்களது பரிசோதனை முடிவில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது.
எனினும் தொடர்ந்தும் அவர்களை தனிமைப்படுத்தி 10 நாட்களுக்குள் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற் கொள்ளப்படும்.
அடுத்த பரிசோதனை முடிவில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் முடிவு கிடைக்கப் பெறலாம், மாறாக ஏற்படவில்லை என்ற முடிவும் கிடைக்கப் பெறலாம்.
முடிவுகள் எவ்வாறிருப்பினும் அதுவரையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.