தொடர்ந்தும் அனலைதீவு முடக்கத்தில் மஞ்சள் கடத்தியோர் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில்
Share
அனலைதீவு பிரதேசத்தில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர், நீதவான் அனுமதியுடன் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அனலை தீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் நடமாடியதாக கருதப்படும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து அப் பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேறாதவாறும் பிரதேசத்துக்குள் புதிதாக யாரும் உட் பிரவேசிக் காதவாறும் முடக்கப்பட்டுள்ளது.
அந்த முடக்கம் நடைமுறையில் உள்ளது என ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிற்கும் பி.சி.ஆர்.பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் வரும் வரை குறித்த முடக்கம் அமுலில் இரு க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்த ப்பட்டுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேருக்கு, உலர் உணவுப் பொருட்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியை ஊர்காவற்றுறை பொலிஸார் மற்றும் கடற்படையினர், சுகாதார பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் அவசர கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்தி வருபவர்களின் தகவல் இருப்பின் பொதுமக்கள் 021 222 6666 எனும் இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மஞ்சள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனலைதீவின் பல பகுதிகளில் நடமாடியதாலும் இவ்வாறான வேறு சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாலும் அனலைதீவிலிருந்து வெளியே வருவதும் உள்ளே செல்வதும் நேற்று முன்தினம் முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி நபர்களில் ஒருவர் தப்பிச்சென்று, காரைநகரில் தங்கியிருந்த வீடும் அந்த வீட்டினை சார்ந்தோரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தீவகத்தில் கடல் மார்க்கமாக ஏற்படும் தொடர்புகளால் ஏற்படக்கூடிய கொரோனா நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.