கொரோனாவால் இறந்தவரை காப்பாற்றியிருக்க முடியும்
Share
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத் தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
“அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளான நேற்று முன்தினமே நீர் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்படாத நிலையில் பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
காலதாமதமின்றி நேரடியாக அவரை அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் உரிய பரிசோதனைகள் ஊடாக அவரைப் பாதுகாத்திருக்க முடியும்” என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குடும்பத் தலைவர் உயிரிழந்ததால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.