கொரோனா அவலத்துக்கு மத்தியில் தேசிய வெசாக் நிகழ்வு நயினாதீவில் தேவையா?
Share
கொரோனாத் தொற்றுக் காலத்தில் வெசாக் தேசிய நிகழ்வை நயினாதீவில் நடத்துவதற்கு பலதரப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
கொரோனாத் தொற்று தென் பகுதியில் மிக மோசமாக பரவி வருகின்ற இவ்வேளையில், எதிர்வரும் மே 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு வெசாக் தேசிய நிகழ்வை நயினாதீவில் நடத்துவதற்கு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.
இதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வருகின்றது. இதில் படைத்தரப்பினர் மும் முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண நகர மையத்தில் இருந்து நயினாதீவு வரை வெசாக் வெளிச்சக் கூடுகளையும் அலங்கார வளைவுகளையும் அமைப்பதற்கு பௌத்த கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது பற்றிய ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு, கடந்த ஏப்பிரல் 30 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் பௌத்த கலா சார அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் படைத்தரப்பினர், பொலிஸார், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிலைமை இதுவாக இருக்கையில், கொரோனாத்தொற்று வேகமாக பரவி வரும் இந்நேரத்தில் வெசாக் தேசிய நிகழ்வை நயினாதீவில் நடாத்துவது ஆபத்தானது என பலரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக வெசாக் தேசிய நிகழ்வில் 200 பேர் பங்குபற்றுதல் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையோடு வெசாக் தேசிய நிகழ்வு நடைபெறலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.