Type to search

Headlines

கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Share

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றன.


அரச படையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்களைத் திரட்டாமல் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் தடைகளை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பலத்த இராணுவ, பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களை மீறி முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மரக் கன்று ஒன்றினையும் நாட்டினார்.


முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


முல்லைத்தீவு நந்திக் கடலோரம் எம்.கே.சிவாஜி லிங்கம், பீற்றர் இளஞ்செழியன் , நிசாந்தன் ஆகியோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர் து. ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி யூனியன்குளம் பகுதியில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்திலேயே இந்த அஞ்சலி நிகழ்வினை அவர் செய்திருந்தார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றில் மெழுகுவர்த்தி ஏற்றி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என சிலர் கலந்துகொண்டனர்.


இதனிடையே, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link