குருந்தூர்மலையில் இராணுவ பாதுகாப்புடன் விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பம்
Share
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில், பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர்மலையில் ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியின் பயனாக முற்றுமுழுதாக இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் நேற்றுமுதல் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளன.
பிரித் ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சி தொடங்கிய காலத்தில் இருந்து குருந்தூர்மலை முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டு வரப்பட்டு அனுமதி இன்றி தமிழர்கள் எவரும் செல்லாதவாறு படையினர் தடைவிதித்து வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு நூற்றுக் கணக்கான படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் 30 பௌத்த துறவிகளின் பிரித் ஓதலுடன் பௌத்த சின்னம் நிறுவப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலை கொண்டு வரப்பட்டு குருந்தூர்மலை பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது.